தங்கத்தின் விலை, சர்வதேச அளவில் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் சர்வதேச தங்கத்தின் விலை 30% உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் 37.5% உயர்ந்திருக்கிறது. அக்டோபர் மாதத்தின் முதல் 8 நாட்களில் மட்டும் 6% அதிகரித்துள்ளது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முந்தைய காலங்களில், தங்கத்தை கொண்டு நாணயங்கள் தயாரிக்கப்பட்ட நிலையில், 1919ஆம் ஆண்டிலிருந்து தான் தங்கத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை தொடங்கியது. தொடர்ந்து, 1944ஆம் ஆண்டு பிரிட்டன் உட்ஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமெரிக்க டாலர் மதிப்பில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி ஒரு அவுன்ஸ், அதாவது 31.10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை 35 டாலராக நிர்ணயிக்கப்பட்டது. அப்போது, இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு அவுன்ஸ் விலை வெறும் 103 ரூபாய் மட்டுமே. அதாவது ஒரு கிராம் தங்கம் 3 ரூபாய் 32 காசுகளாக இருந்தது. ஆனால், இந்த நடைமுறை 1971ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.இருப்பினும், உலக அளவில் அமெரிக்க டாலர் தான் வலிமையான ஒரு நாணயமாக பார்க்கப்படுகிறது . எந்த ஒரு நாடும் சர்வதேச சந்தையில் எந்த ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றாலும் அமெரிக்க டாலரில் தான் வாங்க வேண்டும். உலக சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு டாலரை வாங்குவதற்காகவே, இந்தியா போன்ற நாடுகள் பல லட்சம் கோடிகளை செலவு செய்ய வேண்டி இருக்கிறது. இந்த சூழலில், அமெரிக்காவின் செனட் மற்றும் பிரதிநிதி ஆகிய இரு அவைகளிலும் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கொண்டு வந்த நிதி மசோதா நிறைவேற்ற முடியவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாததால் அந்நாட்டு அரசின் பல துறைகள் முடங்கியுள்ளன. இதனால் பங்குச் சந்தையில் பல லட்சம் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவும் தங்கத்தின் விலை உயர்வுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில், மேலும் டாலரின் மதிப்பை இழக்கச் செய்ய வேண்டும் என்பதில் தீவிரமாக களமிறங்கி இருக்கிறது சீனா. இதற்காக தொடர்ந்து 11 மாதங்களாக சீன மத்திய வங்கி தங்கத்தை வாங்கி குவித்து வைக்கிறது. அந்த வகையில் அக்டோபர் மாதத்தின் நிலவரப்படி சீனா 7.40 கோடி அவுன்ஸ் தங்கத்தை கைவசம் வைத்துள்ளது. இதனால், உலக நாடுகளிடையே தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. இதுவும் உலக அளவில் தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியதற்கு காரணமாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.இந்நிலையில் அமெரிக்க அரசின் நிதி பிரச்சனை தீர்வு கண்டு, இயல்பு நிலைக்கு திரும்பினால், டாலரின் மதிப்பு மீண்டும் உயரத் தொடங்கும். அப்போது தங்கத்தின் விலை கணிசமாக சரியும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். 2011ஆம் ஆண்டு தங்கத்தின் விலை தற்போது போலவே உச்சத்தை எட்டியது. ஆனால், அதன் பின்னர் ஒரு சில மாதங்களிலேயே மிகப்பெரிய சரிவைக் கண்டது. அதே போல் மீண்டும் நடக்கும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.