ஆபரேஷன் அகழி என்ற பெயரில் நில அபகரிப்பு புகாரின் பேரில் சோதனையிட சென்ற போலீசார் பல கோடி மதிப்புடைய ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். ஆனால் போலீசார் என்னென்ன ஆவணங்களை எடுத்து சென்றனர் என்பதை கூட தங்களுக்கு தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.காவலர்கள் ஒரே இடத்தில் குவிந்திருப்பதை கண்டு, பந்தோபஸ்த் பணியில் ஈடுபட்டுள்ளார்களோ என நினைக்க வேண்டாம்... திருச்சியில் நில அபகரிப்பு புகார் எழுந்த நபரின் வீட்டிற்கு சோதனையிடுவதற்காக சென்ற காட்சிகள் தான் இவை...திருச்சி மாவட்டத்தில் நிலத்தை அபகரித்து குற்றச்செயலில் ஈடுபடுபவர்களை தடுப்பதற்காக மாநகர மற்றும் மாவட்ட காவல்துறை இணைந்து ஆபரேஷன் அகழி என்ற பெயரில் குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்வதோடு, சிலரை கைதும் செய்துள்ளனர். இந்த நிலையில் தான், கந்தநல்லூர் கிராமத்தில் உள்ள புனித அடைக்கலமாதா கன்னிமார் சபைக்கு சொந்தமான 9 ஏக்கர் நிலத்தை போலி பத்திரங்கள் மூலம் அபகரித்ததாக மர அறுவை மில் உரிமையாளரான மோகன் பட்டேல் என்பவர் மீது மாரிமுத்து என்பவர் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்துள்ளார். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கடந்த ஞாயிற்றுக்கிழமை அரியமங்கலம் அருகே லஷ்மிபுரத்தில் உள்ள மோகன் பட்டேல் வீட்டிற்கு சோதனைக்கு சென்ற போது, அவரது நண்பரான ரவி, காவலர்களை உள்ளே செல்லாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டிற்குள் பெண்கள் மட்டுமே இருந்ததால் பெண் காவலர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆனால் நீதிமன்ற ஆணையுடன் வந்து சோதனையிடுமாறு கூறி மோகன் பட்டேல் குடும்பத்தினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வீட்டிற்குள் செல்லாமல் பல மணி நேரமாக காத்திருந்த போலீசார், சோதனையிட அனுமதி கேட்டு நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுடன் மீண்டும் மோகன் பட்டேல் வீட்டிற்கு போலீசார் சென்ற நிலையில், குடும்பத்தினர் கதவை திறக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிரடியாக களத்தில் இறங்கிய போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து, 7 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்து, பல கோடி மதிப்புள்ள ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்த லாக்கரை திறக்க குடும்பத்தினர் மறுத்ததால், அதற்கு சீல் வைத்து, நீதிபதி முன் திறப்பதற்காக போலீசார் எடுத்து சென்றனர்.இந்நிலையில் என்னென்ன ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என தெரிவிக்கவில்லை எனவும், தங்களிடம் கையெழுத்து எதுவும் வாங்காமலும் போலீசார் ஆவணங்களை எடுத்து சென்றதாகவும், கைது செய்து விடுவேன் என மிரட்டியதாகவும் மோகன் பட்டேல் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், நீதிமன்ற உத்தரவை காண்பிக்குமாறும், 5 நிமிடத்தில் தங்கள் தரப்பு வக்கில் வந்தவுடன் கதவை திறப்பதாக கூறியும், அதனை கேட்காமல் போலீசார் கதவை உடைத்து ஆராஜக செயலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினர். இதனிடையே நீதிபதி அனுமதி அளித்த இடத்தை தவிர்த்து மற்றொரு இடத்திலும் சோதனை செய்து போலீசார் ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றதாக, நீதிமன்ற உத்தரவு நகலை காண்பித்து குற்றச்சாட்டை முன் வைத்தார் மோகன் படேல் தரப்பு வழக்கறிஞர்.மேலும், புகார் அளித்த மாரிமுத்துவுக்கும் இந்த சொத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும், அவரது செல்வாக்கை பயன்படுத்தி இவ்வாறு செய்வதாகவும், மோகன் பட்டேல் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தாசில்தார், RDO உள்ளிட்டோர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில், ஆவணங்களை ஆய்வு செய்து, முறைகேடாக நிலங்கள் வாங்கியது உறுதியானால் மோகன் பட்டேல் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.