இசைப் பயணத்தில் பொன்விழா கொண்டாடும் இசைஞானி இளையராஜாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாபெரும் பாராட்டு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ரஜினி, கமல் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். இசையமைப்பாளர் இளையராஜாவின் 50 ஆண்டு இசைப்பயணத்தை கவுரவிக்கும் விதமாக, தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.தமிழ் திரையுலகம் மட்டுமின்றி இந்திய திரையுலகிலும், முக்கியமான இசை ஆளுமை கொண்டவர் இளையராஜா. ஆயிரக்கணக்கான படங்களுக்கு இசையமைத்துள்ள இளையராஜா, 82 வயதில் படங்களுக்கு இசையமைத்தும், சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து சாதித்து வருகிறார். இவர் திரையுலகில் 50 ஆண்டுகளை கடந்து சாதனை படைத்துள்ளார். இதற்காக திரையுலகினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும் என வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.இதையடுத்து லண்டனில் சிம்பொனி இசை அமைத்த இளையராஜாவை பாராட்டும் விதமாகவும், அவரின் 50 ஆண்டு சாதனையை புகழும் விதமாகவும், அவர் பிறந்தநாளான ஜூன் 2ம் தேதி சென்னையில் மிகப்பெரிய பாராட்டு விழா தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் என்று சட்டசபையிலேயே முதல்வர் அறிவித்தார். பின்னர் சில காரணங்களால் அந்த விழா தள்ளிப்போனது.இந்நிலையில், இந்த விழா, இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழக அரசு சார்பில் நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரையுலகினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை 'அமுதே… தமிழே...' என்ற பாடலை பாடி இளையராஜா தொடங்கி வைத்தார். அதன்பிறகு, இளையராஜா இசை அமைத்த, 'மடை திறந்து பாயும் நதியலை நான்' என்ற பாடலை எஸ்பிபி சரண் பாடினார். எஸ்பிபி பாடிய, 'ராக்கம்மா கையத்தட்டு' பாடலை சரண் பாடியபோது, ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.செந்தூரப் பூவே பாடலை பாடிய பாலிவுட் பாடகி விபாவரி ஆப்தே ஜோஷிக்கு, தமிழ் மொழி தெரியாத நிலையிலும், சிறப்பாக பாடியதாக பாராட்டிய நடிகர் கமல், 'இந்த நிகழ்ச்சியில் பட்டியலிடப்பட்டுள்ள பாடல்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வு செய்து கொடுத்தது,' எனக் கூறினார்.இந்த விழாவில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் பாடப்பட்டு, நிகழ்ச்சியை கோலாகலமாக்கியதுஇதையும் பாருங்கள்; 'சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்' இளையராஜாவின் பாராட்டு விழா