ஒரு படம், ஒட்டு மொத்த அரங்கத்தையே கட்டிப்போட வைத்து, கை தட்டலால் அதிர்ந்திருக்கிறதா? அதிர வைத்திருக்கிறது, "The Voice of Hind Rajab" அதாவது, சுதந்திர பாலஸ்தீனம். வெனிஸ் நகரில், இந்த படத்தை பார்த்த அனைவரையும் வெலவெலக்க வைத்து விட்டது. ஏனென்றால், இது உண்மைச்சம்பவம். ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிட்டது இந்த வடு. இதன் பின்னணி என்ன தெரியுமா?கடந்தாண்டு 2024ல், ஜனவரி மாதம், காசாவில் நிகழ்ந்த போரில், பரிதாபமாக கொல்லப்பட்ட ஹிந்த் ரஜப் (Hind Rajab) என்ற ஐந்து வயது சிறுமியின் கடைசி நிமிடத்தை கண்முன் கொண்டு வந்துவிட்டது.என்ன நடந்தது?உறவினர்களுடன் காசா நகரத்தை விட்டு வெளியேறும்போது, அவரது குடும்பத்தினரின் கார், ’ஷெல்’ தாக்குதலுக்கு உள்ளானது. தாக்குதலில் இருந்து, முதலில் சிறுமி தப்பி பிழைத்தாள். ஆனால், இறந்தவர்களிடையே சிக்கி, பல மணி நேரம் கழித்தது வேதனையின் உச்சம்.மருத்துவ குழு சிறுமியை தொடர்பு கொள்ள முயன்றபோது பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டியுடன் தொலைபேசியில் பேசியது என்னவென்றால்... "தயவு செய்து என்னிடம் வாருங்கள், தயவு செய்து வாருங்கள். எனக்கு பயமாக இருக்கிறது," என்று, இந்த படத்தில் இணைக்கப்பட்ட உண்மையான பதிவுகள், மனதை கனக்க வைத்துவிட்டது. மீட்புப் பணியாளர்கள் இறுதியாக வந்தபோது, ரஜப் இறந்து கிடந்தாள். சமீபத்தில் நடைபெற்ற 82வது வெனிஸ் திரைப்பட விழாவில், 'தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்' திரையிடுவதற்காக வந்த போது, சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டது.கடந்த வியாழக்கிழமையன்று இரவு, வெனிஸ் திரைப்பட விழாவில் கவுதர் பென் ஹனியாவின் ’தி வாய்ஸ் ஆஃப் ஹிந்த் ரஜப்; வரலாற்று சாதனை படைத்தது. என்ன சாதனை தெரியுமா? ஒன்றல்ல... இரண்டல்ல... சுமார் 23 நிமிடங்கள் பார்வையாளர்கள் எழுந்து நின்று கை தட்டினர். இந்த விழாவிலேயே இதுதான் அதிகளவு பதிவு செய்யப்பட்ட கை தட்டல்.உணர்வுபூர்வமான இந்த படம் பார்வையாளர்களை கண்ணீரில் ஆழ்த்தியது. ’சுதந்திர பாலஸ்தீனம்’ என்ற கோஷங்களும் விண்ணைத் தொட்டது. விண்ணில் இருக்கும், ஹிந்த் ரஜப் இதைக்கேட்டு நெகிழ்ந்திருப்பாள்... ஜூலை 2024ல், வெளியான ஐநா அறிக்கையில், நேரடியாக இஸ்ரேலிய படை மீது குற்றம் சுமத்தியது. இஸ்ரேலிய ராணுவமோ, இதனை மறுத்து, இந்த சம்பவம் பரிசீலனையில் இருப்பதாக கூறிவிட்டது... இந்த படம் திரையிடுவதற்கு முன்னர், வாசிக்கப்பட்ட அறிக்கை என்ன சொன்னது தெரியுமா?"சிறுமி ஹிந்தின் கதை ஒரு முழு மக்களின் பாரத்தை சுமக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் காசாவில் உயிர் இழந்த 19,000 குழந்தைகளில் இவளது குரலும் ஒன்று."இவ்வாறு அறிக்கை வாசிக்கப்பட்டபோது, அரங்கில் நிசப்தம் நிலவியது.ஆறில் இருந்து அறுபது வரை மரணம் இயற்கை தான். அது, சாலை விபத்து, கட்டிட விபத்து என்று கோரமானதாக கூட இருக்கலாம். ஆனால், இந்த சிறுமியின் மரணம், இந்த பட வெளியீடு என்பதெல்லாம், காசாவின் நிலையை தோலுரித்துக் காட்டி விட்டது.சிறுமியின் ஆத்மா சாந்தி அடையட்டும்...