கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தை தனது உடல் உறுப்புகள் மூலம் 5 பேருக்கு மறுவாழ்வு தந்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தாம் இறந்து, பலரது உடலில் உறுப்புகளாய் வாழும் சிறுமிக்கு, கேரள அரசு மரியாதை செலுத்தி பிரியாவிடை தந்திருக்கிறது.தெய்வத்துக்கு நிகராக...தவமாய் தவமிருந்து பெற்ற குழந்தையை 10 மாதத்தில் இயற்கை பறித்துக் கொண்டாலும், பெருந்துயர் நேரத்தில், மனதை திடமாக்கிக் கொண்டு 5 பேருக்கு மறுவாழ்வளிக்க ஒப்புக்கொண்ட பெற்றோரை தெய்வத்துக்கு நிகராக தான் பார்க்கிறார்கள்.சாலை விபத்து, பெருந்துயரம் கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்திற்குட்பட்ட மலப்பள்ளியை சேர்ந்த அருண் ஆபிரகாமின் மனைவி ஷெரின், தனது தாய், தந்தை மற்றும் 10 மாத பெண் குழந்தையான ஆலின் ஆகியோருடன் கோட்டயத்திலிருந்து திருவல்லா நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது, சாலை விபத்தில் சிக்கினர். எதிரே வந்த கார் ஒன்று அதிவேகமாக வந்து மோதியதில் ஏற்பட்ட பெரும் விபத்தில், காரில் சென்ற அனைவரும் படுகாயமடைந்து அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.மூளைச்சாவு, கைவிரித்த மருத்துவர்கள் ஷெரினும் அவரது தாய், தந்தையும் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்ட நிலையில், பத்துமாத பிஞ்சுக் குழந்தை ஆலினின் உடல்நலத்தில் மட்டும் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்களின் பரிந்துரையின்படி, குழந்தை ஆலின் கடந்த 7ஆம் தேதி கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் குழந்தையின் உடல்நலனில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து வேறுவழியின்றி மருத்துவர்களும் பிப்ரவரி 13ஆம் தேதி குழந்தை மூளைச்சாவு அடைந்துவிட்டதாக கூறி கைவிரித்தனர்.மனதை இரும்பாக்கி கொண்டு...ஆலினின் மரணத்தை ஏற்கமுடியாமல் குடும்பமே கதறி அழுதது. மருத்துவமனையை சோகம் தொற்றிக் கொண்டது. பெருத்த தயக்கத்துடன் மருத்துவர்கள் ஆலினின் பெற்றோரிடம் பேச முயன்றனர். வழக்கமாக மூளைச்சாவு அடைபவரின் உடலுறுப்புகள் எவ்வித சேதமும் இன்றி பிறருக்கு தானமளிக்க முடியும் என்பதால், ஆலினின் பெற்றோரிடம் மருத்துவர்கள் எடுத்து சொல்லி பேசியதாக தெரிகிறது. என்ன செய்தாலும் நம் மகள் திரும்பி வரப்போவதில்லை என்ற கசப்பான எதார்த்தத்தை உணர்ந்து கொண்ட பெற்றோர், தங்கள் மனதை இரும்பாக்கி கொண்டு உடலுறுப்பு தானத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்.கேரள அரசின் அறிவிப்பு இதனையடுத்து குழந்தையின் இதயவால்வு, சிறுநீரகம், கண்கள், கல்லீரல் ஆகிய உறுப்புகள், திருவனந்தபுரத்தில் உள்ள பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளுக்கு அவசர அவசரமாக எடுத்துச் செல்லப்பட்டு பொருத்தப்பட்டது. இந்நிலையில், மகளை இழந்த துயரத்தில் ஆழ்ந்திருந்த பெற்றோரை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் மாநில சுகாதாரத்துறை அமைச்சர். அதற்கு ஒருபடி மேலே போய் அரசு மரியாதையுடன் ஆலினின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என மாநில அரசு அறிவிப்பை வெளியிட்டது.துப்பாக்கி குண்டுகள் முழங்க...பெருந்துயரத்தில் இருந்த நிலையிலும் தனது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன் வந்த பெற்றோர் கேரளா முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளனர். ஊர் பேர் தெரியாத பல்லாயிரக்கணக்கானோரின் மனதில் இடம் பிடித்துபிட்ட ஆலினின் இறுதி சடங்கு, பெரும் தலைவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதையை போலவே துப்பாக்கி குண்டுகள் முழங்க, போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெற்றது பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கியது. இறந்தும் வாழ்கிறார் ஆலின்.நியூஸ் தமிழ் செய்திகளுக்காக சதாம். Related Link புதிய காற்றழுத்த தாழ்வு புகுதி