பிறந்த ஆண் குழந்தையின் வயிற்றில் கரு இருப்பதை பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். தாயின் வயிற்றில் இருந்த ஆண் குழந்தையின் வயிற்றுக்குள் கரு உருவானது எப்படி? என்ற மருத்துவர்களின் கேள்வியை விவரிக்கிறது இந்த தொகுப்பு.கர்நாடக மாநிலம் தார்வாட் பகுதியை சேர்ந்த ஒரு பெண், 2ஆவது முறையாக கருவுற்றார். 9 மாதம் கடந்த அந்த பெண், பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அந்த பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தையின் உடலில் ஏதோ மாற்றம் இருப்பதை கவனித்த மருத்துவர்கள், குழந்தையின் உடலை அல்ட்ரா சவுண்ட் சிஸ்டம் மூலம் பரிசோதித்தனர். அப்போது, குழந்தையின் வயிற்றுப் பகுதிக்குள் கரு இருந்ததை பார்த்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். குழந்தையின் வயிற்றில் வளர்ந்த முதுகெலும்புடன் கூடிய கரு இருப்பது தெரிய வந்தது. இதனால், ஆச்சரியப்பட்ட மருத்துவர்கள் அடுத்தகட்ட பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் தயாரானார்கள். மருத்துவ உலகில் இது அரிதானது என கூறும் மருத்துவர்கள் 5 லட்சம் குழந்தை பிறந்தால் அதில் ஒரு குழந்தைக்கு வயிற்றுக்குள் இப்படி கரு உருவாகலாம் என கூறியுள்ளனர். தற்போது அந்த குழந்தையின் வயிற்றில் இருந்த கருவை அகற்றுவதற்கான சிகிச்சை நடைபெற்றது. இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்திலும் ஒரு பெண்ணிற்கு பிறந்த ஆண் குழந்தையின் வயிற்றில் கை, கால் வளர்ச்சியடைந்த இரட்டை கரு இருப்பது கண்டறியப்பட்டது. இதுபோன்ற அரிதான நிகழ்வு மருத்துவ உலகில் அடுத்த கட்ட ஆராய்ச்சிக்கு எடுத்து செல்வதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.