ஆறு வயது சிறுமியை, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொடூரமாக எரித்துக் கொலை செய்த வழக்கில், குற்றவாளியாக கருதப்பட்ட தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன? நீதிமன்றம் கூறியது என்ன? சென்னை அடுத்த போரூர், மதனந்தபுரம் பகுதியில் 6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொலை செய்ததாக, தஷ்வந்த் என்பவன் சிக்கினான். வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு, கழுத்தை நெரித்துக் கொலை செய்து, கிரிக்கெட் பேக்கில் சடலத்தை எடுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி எரித்ததாக, தஷ்வந்தை போலீஸ் கைது செய்தது, திடுக்கிட வைத்தது.முதலில் மாயமானதாக நினைத்து, சிறுமியை தேடி வந்த போலீஸாருக்கு, ஒரே ஒரு சிசிடிவி காட்சி, துருப்பு சீட்டாக அமைந்து, தஷ்வந்தை காட்டிக் கொடுத்தது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், கைதாகி சிறைக்கு சென்றவன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால், தஷ்வந்தின் பெற்றோர் வழக்கை நடத்தி ஜாமீனில் வெளியே எடுத்தனர். ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த், மது, மாது, போதைக்கு அடிமையாகி, பெற்ற தாயிடம், பணம் கேட்டு டார்ச்சர் செய்துள்ளான். ஒரு கட்டத்தில், இரும்பு கம்பியால், தாயை அடித்துக் கொலை செய்து விட்டு நகை, பணத்துடன் தப்பியோடினான். இந்த வழக்கு, முதலில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை முடிவில், கடந்த 2018, பிப்ரவரி 19ஆம் தேதி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் தஷ்வந்த் முறையீடு செய்திருந்தான். ஆனால், சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்பட்டு இருப்பதாக கூறி, தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்ற தஷ்வந்த், கருணை அடிப்படையில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தான்.இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம், தஷ்வந்துக்கு அளிக்கப்பட்ட தண்டனை, ஆயுள் தண்டனையாக இருந்திருந்தால், மனுவை ஏற்றிருக்க மாட்டோம் என குறிப்பிட்டதோடு, தூக்கு தண்டனை என்பதால் தான் விசாரணைக்கு ஏற்றதாகவும் கூறியது.மேலும், வழக்கின் விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் அமர்வில் நடந்தது. தஷ்வந்த் வழக்கில் முறையான ஆதாரம் ஏதும் சமர்ப்பிக்கவில்லை என்ற நீதிபதி, முக்கிய ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட சிசிடிவியில் இருப்பது தஷ்வந்த் தானா? என்பதை காவல்துறை உறுதி செய்யவில்லை என்றும் கூறினார்.மேலும், டி.என்.ஏ. பரிசோதனையும் சரியாக ஒத்துப் போகவில்லை எனக் கூறிய உச்சநீதிமன்றம், சந்தேகத்தின் அடிப்படையில் தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய உத்தரவிட்டது.சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு குறித்து மாங்காடு போலீஸ் தான் ஆரம்பத்தில் இருந்து விசாரணை நடத்தி வந்தது. விசாரணை அதிகாரியாக உதவி ஆணையர் கண்ணன், செயல்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.ஏற்கனவே தஷ்வந்த் கைதான போதே 90 நாட்களில் போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தினால் தான் தஷ்வந்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற விசாரணையில் தஷ்வந்த் மீதான குற்றத்தை காவல்துறை நிரூபிக்க தவறியிருக்கிறது.உச்சநீதிமன்ற விசாரணைக்கு ஏற்ப ஆதாரங்களை திரட்டி, குற்றம் சாட்டப்பட்டவனுக்கு தண்டனையை வாங்கி கொடுக்காமல் காவல்துறை அலட்சியம் காட்டியது, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கீழமை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை வலுப்படுத்தாமல் போலீசார் கடமை தவறியது, பிஞ்சு சிறுமியை இழந்த பெற்றோரின் கண்ணீருக்கு காரணமாக மாறியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த, பாமக தலைவர் அன்புமணி், குழந்தைகள் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு கருப்பு நாள் என வேதனை தெரிவித்ததோடு, இந்த விடுதலை பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நீதி பெற்றுத் தருவதில் நாம் எவ்வளவு பலவீனமாக இருக்கிறோம் என்பதை காட்டுவதாக சாடியுள்ளார்.இந்நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கூடுதல் ஆதாரங்களை திரட்டி, மேல் முறையீடு செய்து பாலியல் கொலையாளி எனக் கூறப்படும் தஷ்வந்துக்கு தண்ட னையை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.