துபாயில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில், இந்தியா சார்பில் பங்கேற்ற தேஜஸ் போர் விமானம், கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. வானில் வட்டமடித்து சாகசம் நிகழ்த்திய போது விமானம் விபத்தில் சிக்கிய நிலையில், விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.துபாயில், எமிரேட்ஸ் நிறுவனம் சார்பில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. 17ஆம் தேதி தொடங்கிய வான் சாகச நிகழ்ச்சியின் இறுதி நாளில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்திருந்த விமானங்கள் சாகசங்களை நிகழ்த்தி காட்டின. இந்தியாவில் இருந்து முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்திலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் சென்றிருந்த நிலையில், சாகசத்தின் போது, விபத்தில் சிக்கி இருக்கிறது.வானில் வட்டமடித்து சாகசம் காட்டிய போர் விமானம் திடீரென கீழ் நோக்கி வந்த நிலையில், மண் தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. விமானம் விழுந்ததும் பெரும் தீப்பிழம்புகளுடன் கரும்புகை எழுந்ததை பார்த்து பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.விமான நிலையம் அருகே நிகழ்ந்த கண்காட்சியில் குழந்தைகள், பெண்கள் என குடும்பம், குடும்பமாக ஏராளமானோர் பங்கேற்றிருந்த நிலையில், ஆள் இல்லாத இடத்தில் விமானம் விழுந்து விபத்தில் சிக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இருப்பினும், கோர விபத்தில் விமானி உயிரிழந்ததாக விமானப்படை அறிவித்துள்ளது. அவர், இமாச்சலப்பிரதேசத்தின் கங்ரா மாவட்டத்தை சேர்ந்த விங் கமாண்டர் நம்நாஷ் ஷியால்(Namansh Syal) என அடையாளம் காணப்பட்டது. மேலும் கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற விமானம்தான் விபத்தில் சிக்கியிருக்கிறது. Aerobatic சாகசத்தை நிகழ்த்திக் கொண்டிருந்த போது தான் போர் விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது. AEROBATIC என்பது தலைகீழாக பறப்பது, பல்டி அடிப்பது, ஒரே கோணத்தில் ROLL- ஆகுவது, டைவ் அடிப்பது போன்ற கடினமான சாகசங்கள் அடங்கியது என்ற நிலையில், அந்த சாகசத்தை நிகழ்த்தும் போது தான் தேஜஸ் போர் விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது.உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழ் நோக்கி வந்த நிலையில், நிலைமையை உணர்ந்த விமானி மீண்டும் விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.அதோடு, விமானத்தில் NEGATIVE G என்ற MODE-ல் ஆக்டிவேட் ஆகியிருந்தது எனவும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பொதுவாக, ஏரோபாட்டிக் சாகச நிகழ்ச்சி நடக்கும் போதோ அல்லது நடுவானில் குலுங்குவது போன்ற அசாதாரண சூழல்களில் மட்டும் தான் இந்த NEGATIVE G MODE ஆக்டிவேட் செய்யப்படும் என சொல்கிறார்கள் நிபுணர்கள்.அதாவது, NEGATIVE G என்பது புவி ஈர்ப்பு விசைக்கு எதிர் திசை நோக்கி விமானம் தள்ளப்படுவதாகும். இந்த சூழலை சரியாக கையாளவே விமானிகளுக்கு தனியாக பயிற்சி கொடுக்கப்படும் என்ற நிலையில், அதன் மூலமாக விபத்து நிகழ்ந்ததா? என்றும் சந்தேகிக்கப்படுகிறது.மேலும், சாகசத்தில் ஈடுபட்ட விமானம், நிர்ணயிக்கப்பட்ட உயரத்தில் இயங்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதோடு, ஒரே நேரத்தில் இரண்டு சாகசங்களை செய்ய முயன்றதும் தெரிய வந்துள்ள நிலையில், விபத்துக்கான காரணம் இதுவாகவும் இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.ஹிந்துஸ்தான் ஏரோனேட்டிக்கல் நிறுவனம் தான் தேஜஸ் போர் விமானத்தை வடிவமைத்தது. இந்தியா வசம் இருக்கும் அதிநவீன தேஜஸ் போர் விமானம், முழுக்க முழுக்க உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. 2016ஆம் ஆண்டு விமானப்படையில் சேர்க்கப்பட்ட இந்த தேஜஸ் விமானம், கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் சேவைக்கு பிறகு கோர விபத்தில் சிக்கியிருக்கிறது.கடந்த ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் பயிற்சியின் போது ஒரு தேஜஸ் விமானம் விபத்தில் சிக்கியது. அப்போது, விமானி பாதுகாப்பாக தப்பி விட்ட நிலையில், தற்போது 2ஆவது முறையாக தேஜஸ் விமானம் விபத்தில் சிக்கியிருக்கிறது.மணிக்கு 2,200 கி.மீ. வேகத்தில் பறக்கக் கூடிய திறன் பெற்ற தேஜஸ் போர் விமானம், 4 ஆயிரம் கிலோ எடை கொண்ட போர் கருவிகளையும் சுமந்து செல்லும் திறன்பெற்றது.வான் மற்றும் தரை இலக்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட தேஜஸ் விமானம், ஏவுகணைகளையும் சுமந்து சென்று தாக்கும் திறன் படைத்தது ஆகும். கார்பன் பைபர் மெட்டீரியல் வைத்து விமானத்தின் பாகங்களும், அலுமினியம் - லித்தியம் கலந்த கலவையை கொண்டு விமானத்தின் சக்கரமும் செய்யப்பட்டுள்ளது.மேலும், வானில் பறக்கும் போது எரிபொருள் நிரப்பும் வசதியும் இந்த தேஜஸ் விமானத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விமானப்படை உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. விசாரணை நிறைவில் தான் உண்மையான காரணம் தெரியவரும்.