தமிழ்நாடு குத்துச்சண்டை கூட்டமைப்பில் உள்ள குளறுபடிகளால் பல வீரர் வீராங்கனைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குத்துச்சண்டை விளையாட்டிலும் உள்குத்து அரசியலா? இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? என்ன நடக்கிறது தமிழ்நாடு குத்துச்சண்டை கூட்டமைப்பில்?1975 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு குத்துச்சண்டை கூட்டமைப்பு, சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் பல மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தின் விதிகளின்படி 3 வருடத்திற்கு ஒரு முறை தலைவர் தேர்தல் நடத்தப்படவேண்டும் எனக் கூறப்படுகிறது. ஆனால், தற்போதைய தலைவரான பொன் பாஸ்கர் என்பவர் 2010 ஆம் ஆண்டுமுதல் தலைவர் பதவியில் தொடர்ந்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலைவராக உள்ள பொன்பாஸ்கரால் கூட்டமைப்பை சரியான முறையில் கொண்டு செல்ல முடியவில்லை என கூறும், சர்வதேச குத்துச்சண்டை வீரர் லட்சுமிகாந்தன், பொன்பாஸ்கர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்.தலைவராக உள்ள பொன்பாஸ்கரின் செயல்பாடுகளால், இந்த கூட்டமைப்பில் உள்ள வீரர், வீராங்கனைகளுக்கு, தமிழக அரசால் வழங்கப்படும் சலுகைகள் எதுவும் கிடைப்பதில்லை என ஆதங்கப்பட்டார். 1975 ஆம் ஆண்டு முதல் 2010 வரை தமிழ்நாடு குத்துசண்டை கூட்டமைப்பு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அங்கீகரிக்கப்பட்டு எந்த பிரச்னையும் இல்லாமல் செயல்பட்டு வந்ததாகவும், பொன்பாஸ்கர் பதவியேற்ற பின் SDAT சொல்லக்கூடிய PROTOCOL களை முறையாக கடைபிடிக்காததால் தற்போது தமிழ்நாடு குத்துச்சண்டை கூட்டமைப்பு அங்கீகரிக்கபடாத அமைப்பாக மாறிவிட்டதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர் அங்குள்ள பயிற்சியாளர்கள் ..தலைவராக உள்ள பொன்பாஸ்கர், செயலாளார், பொருளாளர் உள்ளிட்டோர் யாரும் பாக்ஸிங் வீரர்கள் இல்லை என்பதோடு, கூட்டமைப்பில் உள்ளவர்கள் கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாகவும் குற்றம்சாட்டுகிறார் பயிற்சியாளர் கார்த்திக்.பல குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதாகவும், ஆனால் சான்றிதழ்கள் எங்கும் அங்கீகரிக்கப்படாததால் குத்துச்சண்டையை விட்டுவிட்டு ஜிம் கோச்சாக பணிபுரியும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார் குத்துச்சண்டை வீராங்கனை திவ்யா.இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்கப் பலமுறைதொடர்பு கொண்டும் கூட்டமைப்பின் தலைவர் பொன் பாஸ்கரின் விளக்கத்தைப் பெறமுடியவில்ல. தமிழக அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு, வருங்கால குத்துச்சண்டை வீரர்களுக்கு வாழ்வுஅளிக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகவும் உள்ளது...