தமிழகத்தில் காவிரி டெல்டா உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் வேதனை அடைந்துள்ள விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.. நாகை மாவட்டத்தில் 2 ஆவது நாளாக கனமழை பெய்த நிலையில் அங்கு 16 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அங்கு கடல் சீற்றம் காணப்பட்ட நிலையில் , நல்லியான் தோட்டம் பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 வது நாளாக பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளான திருநாகேஸ்வரம், சோழபுரம், நாச்சியார்கோவில், சுவாமிமலை, பட்டீஸ்வரம், சாக்கோட்டை, திருச்சேறை போன்ற பல பகுதிகளிலும் கன மழை பெய்தது. செம்பியவரம்பல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா நெற் பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவுக்கு உட்பட்ட நெய்வாசல், குலமங்கலம் தாந்தோணி, திருமங்கலக்கோட்டை, பாப்பாநாடு, ஒக்கநாடு கீழையூர், புலவன் காடு, திருவோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கன மழையினால் சுமார் 1500 ஏக்கரிலான நடவு பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.மயிலாடுதுறை மாவட்டம் குளிச்சார் ஊராட்சியில் வடிகால் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் 150 ஏக்கரிலான சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின. கடந்த 5 ம் தேதி முதல் பெய்து வரும் மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்துள்ள தங்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் வடிகால் வாய்க்காலை தூர்வாரி தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், நன்னிலம் பகுதியில் கனமழையின் போது 50 ஆண்டுகள் பழமையான மரம் சாலையில் விழுந்தது. அப்போது அவ்வழியாக வந்த பெண் ஒருவர் நல் வாய்ப்பாக உயிர் தப்பினார். இதையடுத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது மரத்தை அப்புற படுத்தும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.அரியலூர் புது தெரு பகுதியில் சுமார் 220 ஹெக்டேர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதாக கூறிய மாவட்ட ஆட்சியர், மழை ஓய்ந்த பின்னரே முழு விபரங்கள் தெரிய வரும் என்றார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பெய்த தொடர் கனமழையில் 8வது வார்டில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாவதாகவும், தேங்கி நிற்கும் கழிவுநீரை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.