சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதமே எஞ்சியிருக்கும் நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் அறிவித்த நிலையில், அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது. திமுக ஆட்சி தான் மீண்டும் அமையும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வரும் நிலையில் லட்சக்கணக்கிலான அரசு ஊழியர்களை பகைத்து கொள்ள போகிறதா? அல்லது கோரிக்கைகளை நிறைவேற்ற போகிறதா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக, திமுகவுக்கு அசைக்க முடியாத அஸ்திரமாக இருந்து வரும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் 2026 தேர்தல் நெருக்கத்தில் கையை முறுக்க தொடங்கியிருப்பது பேரிடியாக அமைந்துள்ளது. 2021 தேர்தலை சந்திக்கும் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் நீண்ட கால கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தது திமுக. அதோடு, அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும், இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், பகுதி நேர ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தது.இந்த வாக்குறுதிகளை நம்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மொத்த வாக்குகளும் திமுகவுக்கு கிடைத்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், வழக்கம் போல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் காற்றில் பறக்க விடப்பட்டன. இந்த நிலையில், 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில், ஜனவரி 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தது அரசு ஊழியர்கள் சங்கம். கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர், அரசு ஊழியர்கள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போதே, அரசு ஊழியர்களின் 10 அம்ச கோரிக்கைகள் நான்கு வார காலத்திற்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் கூட, இன்னும் துரும்பை கூட கிள்ளி போடாத நிலையில் தான், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நோக்கி அரசு ஊழியர்கள் தரப்பு நகர்ந்துள்ளது.காலவரையற்ற போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியானதுமே, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது அரசு தரப்பு. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 4 மணி நேரமாக நடந்த பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை எனக் கூறப்படுகிறது. பொங்கலுக்கு முன்பு முக்கிய அறிவிப்பு வெளியிடுவதாக அமைச்சர்கள் கூறவே, பேச்சுவார்த்தைக்கு வந்தவர்களும் புறப்பட்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது. இதனால், காலவரையற்ற வேலை நிறுத்தம் திட்டமிட்டது போல நடைபெறும் என போட்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. கலைஞர் கருணாநிதி ஆட்சியில் இருந்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வாக்குகள் திமுகவுக்கு தான் கிடைத்து வருகின்றன என்ற நிலையில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அண்மையில், பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு செய்ய IAS அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. 9 மாத கால அவகாசம் எடுத்துக் கொண்ட இந்த குழு, முழு அறிக்கையை தாக்கல் செய்யாமல் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தது, அரசு ஊழியர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.இந்த நிலையில், அடுத்தாண்டு தேர்தல் வர இருக்கும் நிலையில் தான் காலவரையற்ற போராட்டத்தை கையிலெடுத்துள்ளன அரசு ஊழியர்கள் அமைப்பு. இன்னொரு பக்கம், திமுகவின் தேர்தல் வாக்குறுதியான தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வரும் செவிலியர்களுடன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார்.முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், அமைச்சர் மா.சு., மிரட்டும் தொனியில் பேசுவதாக செவிலியர்கள் சங்கங்கள் சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை, திங்கட் கிழமை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நிர்வாக குழு முடிவெடுக்கும் வரை போராட்டம் நீடிக்கும் என செவிலியர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேர்தல் நெருங்கும் வேளையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களும், செவிலியர்கள் சங்கமும் தீவிரம் காட்டி வருகின்றன. போராட்டங்கள் மூலம் அரசுக்கு அழுத்தம் கொடுக்க தொடங்கியுள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோபம், வருகிற தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால், திமுக அரசு இதனை எப்படி கையாள போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.அதோடு, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டுமே சுமார் 10லட்சம் பேர் இருக்கிறார்கள் என்ற நிலையில், மீண்டும் ஆட்சியமைக்கும் கனவில் இருக்கும் திமுக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றும் பட்சத்தில், பல லட்சம் கோடி நிதிச்சுமை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது போராட்டத்தில் குதிக்க இருக்கும்அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை எப்படி சமாளிக்க போகிறது திமுக அரசு என்பது அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தான் தெரியவரும்.