வேலை வாங்கிக்தருவதாக ஒப்பந்ததாரர் கூறியதை நம்பி சென்னை வந்த மேற்கு வங்க தொழிலாளி இறுதியில் பசியின் கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் பச்சை மீனை மென்று தின்று உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த கோரம் சென்னையை உலுக்கியுள்ளது.வந்தாரை வாழ வைக்கும் என்ற ஏகபோக போற்றுதலுக்கு உரிய சென்னை மாநகரம் இன்று வாழ வழிதேடி வந்தவனை பசியால் சிதைத்து கொலை பழிக்கு ஆளாகியிருக்கிறது.... ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினேன் என ஓடிய பலரை உச்சாணி கொம்பில் ஏற்றிவிட்டு அழகு பார்க்கும் பெருமை சென்னை மக்களுக்கு மட்டுமே உண்டு...இதே நம்பிக்கையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வேலை இருப்பதாக ஒப்பந்ததாரரின் பேச்சை நம்பி மேற்கு வங்கத்தை சேர்ந்த 11 கூலி தொழிலாளர்கள் ரயில் ஏறி சென்னை வந்துள்ளனர். கடந்த மாதம் 10-ம் தேதி சென்னை செண்ட்ரல் வந்தடைந்த அவர்கள், ஒப்பந்ததாரர் கூறிய இடத்துக்கு சென்று மூன்று நாட்களாக காத்திருந்தும், வேலை கிடைக்கவில்லை. இதையடுத்து அறிமுகம் இல்லாத, மொழி தெரியாத ஊரில் கையில் பணமும் இல்லாத சூழலில் இனியும் நாட்களை தள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்த அவர்கள், பொன்னேரியில் இருந்து நடந்தே சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்துள்ளனர்.. ஆனால் சொந்த ஊர் செல்ல டிக்கெட் எடுக்க பணமில்லாததால் என்ன செய்வது என தெரியாமல் 11 பேரும் அங்கேயே தங்கியுள்ளனர். ரயில் நிலையத்தில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த குடிநீரை மட்டுமே அருந்தி நாட்களை கடத்தியதாக தெரிகிறது.மொழி தெரியாத ஊரில் உதவி கேட்கவும் முடியாமல், தன்மானத்தை இழந்து பிச்சை எடுக்கவும் மனமில்லாமல் 11 பேரும் பசியின் கொடுமையை அனுபவித்து வந்துள்ளனர். பசி உடலை உருக்க கடந்த 16ம் தேதி 5 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். என்ன செய்வது என தெரியாமல் சக தொழிலாளர்கள் அலறி கூச்சலிட, விவசாயிகளின் நிலையை பார்த்த ரயில்வே போலீசார், 5 பேரையும் மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதற்கிடையே, எஞ்சியவர்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில் வேலைக்காக தமிழகம் வந்து சிக்கிக்கொண்டவர்கள் தொடர்பான விவரம் மேற்கு வங்க ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதையடுத்து மேற்கு வங்க ஆளுநரின் உத்தரவின் பேரில் அவரது சட்ட ஆலோசகரின் தந்தையான சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி சசிதரன் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 6 தொழிலாளர்களுக்கும் பண உதவி செய்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 பேரில் 3 பேர் உடல் நலம் தேறி ரயில் மூலம் சொந்த ஊர் திரும்பிய நிலையில் பாதிப்பில் இருந்து மீளாத ஒருவர் மட்டும் விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால் 35 வயதான சமர் கான் என்ற தொழிலாளி உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்தது தான் பரிதாபமே...பசியை தாங்கிக்கொள்ள முடியாமல் தொழிலாளி சமர்கான் பச்சை மீனை தின்று பசியாற முயன்றதால் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.சமர்கானின் உடல் நிலை மோசமடைந்திருப்பது குறித்து அவர்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சென்னை வந்த உறவினரான கிஷோர் என்பவர், உயிரிழந்த சமர்கானின் உடலை எப்படி சொந்த ஊர் எடுத்துச்செல்வது என தெரியாமல் செய்வதறியாது தவித்த நிலையில் தான் முன்பு மேற்கு வங்கத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றி முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இஸ்ரேல் ஜெபசிங் தானாக முன்வந்து உதவி செய்திருக்கிறார். விவசாய கூலி தொழிலாளியான சமர்கானின் கைகள் பிடித்த கலப்பைஎத்தனை வயிற்றின் பசியை ஆற்றியதோ தெரியவில்லை... ஆனால் வாழ வழிதேடி வந்த இடத்தில் ஒருபிடி சோற்றுக்கு கூட வழிஇல்லாமல் பசியின் கொடுமையால் பச்சை மீனை மென்று தின்னும் நிலைக்கு தள்ளப்பட்ட கொடுமையை நினைக்கும் போதே கண்கள் குளமாகிறது. பசி என்று வந்தால் ஓடோடி உணவளிக்கும் சென்னையில் இப்படி ஒரு சம்பவம் வேதனையளிப்பதாய் உள்ளது. சம்பந்தபட்டவர்கள் யாசகம் கேட்க கூடாது என்ற நிலையில் நிலைமையை வெளியில் சொல்லாததால் இந்த சோகம் நிகழந்திருப்பதாக கூறுகின்றனர்.