புகழ்பெற்ற கச்சத்தீவு புனித அந்தோணியார் திருவிழா வரும் பிப்ரவரி 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அன்றைய தினம் சிலுவைப்பாதை மற்றும் திருப்பலியும், 28ஆம் தேதி தேர் பவனியும் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான நட்புறவின் அடையாளமாகவும், மீனவர்களின் காவல் தெய்வமாகவும் விளங்கும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த திருவிழா தேதிகள், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் பேரழிவு காரணமாக, நிலவிய அசாதாரண சூழலுக்குப் பிறகு, தற்போது நிலைமை சீராகி வருவதைத் தொடர்ந்து, திருவிழாவிற்கான முதற்கட்ட பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படவுள்ளன.