ஆன்-லைன் மோசடியில், 17 லட்சம் ரூபாயை இழந்த பிக்பாஸ் சவுந்தர்யா, வீடியோ வெளியிட்டுள்ளார். சைபர் கிரைம் மோசடி கும்பல், தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதுப்புது வடிவம் எடுத்து, பொது மக்களிடம் பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். Fedex கொரியர் மோசடி, மேட்ரிமோனியல் மோசடி, ஆன்-லைன் டிரேடிங் மோசடி, பிட்காயின் மோசடி, டிஜிட்டல் அரஸ்ட் என வித விதமாக பொது மக்களை நம்ப வைத்து, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இந்த வரிசையில், பிரபல ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட நடிகை சவுந்தர்யா, 17 லட்சம் ரூபாயை, fedex கொரியர் மோசடி மூலமாக டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டு, கடந்தாண்டு பணத்தை இழந்த வேதனையை பகிர்ந்தது, சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.இந்நிலையில், நடிகை சவுந்தர்யாவின் சைபர் க்ரைம் மோசடி புகார் தொடர்பாக, கடந்த ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி சென்னை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஓராண்டு கழித்து, தற்போது மீண்டும் நடிகை சவுந்தர்யா, தனது சமூக வலைதள பக்கத்தில், தனக்கு நடந்த மோசடி தொடர்பாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.தன்னைப் போன்றே பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்தி அனுப்பி பணத்தை எவ்வாறு மீட்பது? எனக் கேட்பதாகவும் கூறி, வீடியோ வெளியிட்டுள்ளார். குறிப்பாக, fedex கொரியர் ஸ்கேம் மூலம் 24 மணி நேரம் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்பட்டு 17 லட்சம் ரூபாய் இழந்ததை வீடியோவில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நகைச்சுவையாக வெளிப்படுத்தியுள்ளார்.தன்னை ஏமாற்ற வந்த சைபர் கிரைம் கும்பலிடமே, உண்மையான போலீசார் என நம்பி புகார் அளிக்க சென்று ஏமாந்ததையும் தெரிவித்துள்ளார். பணப் பரிவர்த்தனைக்காக தன் வங்கிக் கணக்கில், சைபர் கிரைம் மோசடி கும்பல் கூறிய வங்கி கணக்கை சேர்க்க, 24 மணி நேரம் எடுக்கும் என்பதால் அதுவரை தன்னை டிஜிட்டல் அரெஸ்ட் செய்து வைத்திருந்ததாகவும், அதுவரை நகர விடாமல் தன்னை வைத்திருந்ததாகவும் நடிகை சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.புகார் கொடுத்து, வழக்கு பதிவு செய்து ஓராண்டாகியும் 17 லட்சம் ரூபாய் கிடைக்கவில்லை எனவும், பணத்தை இழந்த பிறகு புகார் அளித்து வழக்கு பதிவு செய்தாலும், இழந்த பணம் திரும்ப கிடைக்குமா? என்பது சந்தேகம் தான் என்றும் கூறியுள்ளார். இனி, யாருமே இதுபோன்று வீடியோ கால் உள்ளிட்ட அழைப்புகளை எடுக்க வேண்டாம் எனவும் தேவையில்லாத லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் எனவும் தனது காதலன் நடிகர் விஷ்ணுவுடன் சேர்ந்து சைபர் கிரைம் விழிப்புணர்வு பதிவு ஒன்றை நடிகை சௌந்தர்யா சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தனது youtube சேனலிலும் இந்த வீடியோவை வெளியிட்டு லட்சக்கணக்கானோர், அதைப் பார்த்து பகிர்ந்ததால் வைரலாகி வருகிறது.