வெள்ளியில், அதிக லாபம் கிடைப்பதாகக் கூறி, வெள்ளிக் கட்டிகளை, மக்கள் வாங்கிக் குவிப்பதாக, நகை வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.தங்கத்தின் விலை, சர்வதேச அளவில் வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் சர்வதேச தங்கத்தின் விலை 30% உயர்ந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் 37.5% உயர்ந்திருக்கிறது. அக்டோபர் மாதத்தின் முதல் 8 நாட்களில் மட்டும் 6% அதிகரித்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை மக்களால் தங்கத்தை நினைத்து கூட பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலையும் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால், வெள்ளியை வாங்கிக் குவிப்பதில், மக்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏனெனில், கடந்த 10 நாட்களில் மட்டும் ஒரு கிலோ வெள்ளி ரூ.30,000 அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ரூ.195க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5000 உயர்ந்து, 1 லட்சத்து 95,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது வெள்ளியில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபத்தை பெற்றுத் தந்துள்ளது. தொழில் துறையை பொருத்தவரை, வெள்ளியின் தேவை பெருகியிருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது சோலார் மின் தகடு, லித்தியம் பேட்டரி, எலெக்ட்ரிக் வாகனங்கள், எலெக்ட்ரிக் கம்பிகள், செல்போன்கள், கம்ப்யூட்டர்கள், ஏஐ தொழில்நுட்ப சாதனங்கள் போன்றவற்றில், வெள்ளியின் பயன்பாடு அதிகம். இதனால் வெள்ளிக்கான தேவையும் உயர்ந்து, இதன்மூலம் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் காரணமாகவே, உலகளவில் இந்தியா, அமெரிக்கா, சீனா ஆகிய தொழில்துறை முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள், தொழிற்சாலை பயன்பாட்டுக்காக வெள்ளியை அதிகளவில் கொள்முதல் செய்து வருகின்றன.இது மட்டுமின்றி, வெள்ளியின் விலை தற்போது கிடுகிடுவென உயர்ந்து வருவதால், இதுவரை வெள்ளியில் முதலீடு செய்யாதவர்களும், இனி வரும் காலங்களில் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்ட துவங்கியிருக்கிறார்களாம். அதேபோல சிறு முதலீட்டாளர்களும் கையிருப்பில் வெள்ளியை வாங்கி வைத்துக் கொள்கிறார்களாம். இதனால் தமிழ்நாடு முழுவதும் வெள்ளிக் கட்டிகள் விற்று தீர்ந்துள்ளதாகவும் முன்கூட்டியே புக்கிங் செய்தாலும் உடனே கிடைப்பதில்லை, 10, 15 நாட்களுக்கு காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் நகை வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.