தங்கம் விலை உயர்வுக்கு, அமெரிக்கா, சீனா வர்த்தக போர் தொடங்கி, பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது... இதெல்லாம் சரி, இந்த வெள்ளி ஏன் இப்படி உயர்ந்து கொண்டே செல்கிறது?தற்போது, உலகளாவிய சந்தையில், வெள்ளி பற்றாக்குறை நிலவுகிறதாம். அதனால், எதிர்கால விலை, ஸ்பாட் விலையை விட கீழே சரிந்து உள்ளதாக, The Multi Commodity Exchange of India Limited நிறுவனமான MCX தெரிவித்துள்ளது. இந்த போக்கு இந்தியாவிலும் காணப்படுகிறது. முதலீடு மற்றும் தொழில்துறை தேவை அதிகரிப்பால், பண்டிகை கால வெள்ளிக்கான தேவையும், இந்த இடைவெளியை உயர்த்தி உள்ளது. MCXன் கருத்துப்படி, இந்தியாவில் வெள்ளிக்கான தேவை உயர்வு மற்றும் நாணய மதிப்பு, சுங்க வரி, உள்ளூர் சந்தை நிலைமைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. வரும் நாட்களில் வெள்ளியின் விலை அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் சொல்கின்றனர். தொழில்துறை தேவை, விழாக் காலம், சர்வதேச சந்தை நிலவரம் என பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக, தங்கத்திற்கு மாற்றாக, வெள்ளியில் பலரும் முதலீடு செய்வதால், அதற்கான தேவையும் அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில், வெள்ளிக்கட்டிகள் முற்றிலும் தீர்ந்து விட்டதாகவும் தற்போதைய சூழலில் வெள்ளிக் கட்டிகளை முன்பதிவு செய்தே வாங்க முடிவதாகவும் நகை வியாபாரிகள் கூறுகின்றனர். அதாவது, ”நிச்சயமாக, வெள்ளியின் தேவை முன்பை விட இப்போது அதிகரித்துள்ளது. இந்தளவுக்கு முன்பு தேவை இருந்ததில்லை. முன்பு பணம் செலுத்தியதுமே வெள்ளி கட்டிகள் கிடைத்துவிடும். இப்போது முன்பதிவு செய்துவிட்டு 10 நாட்கள் காத்திருக்க வேண்டும். முன்பதிவு செய்தபோது என்ன விலை இருந்ததோ, அதே விலைக்கு வெள்ளிக் கட்டியை வாங்க முடியும். இப்போது தான் வெள்ளிக் கட்டிகளுக்கு இப்படி அதிக அளவில் தேவை எழுந்துள்ளது" என்று வியாபாரிகள் சொல்கின்றனர். தொழில்துறையில் வெள்ளி அதிகமாக தேவைப்படுகிறது. பேட்டரி, சோலார் பேனல், ஏரோ-நாட்டிக்கல் பொறியியல் என பல்வேறு துறைகளில் வெள்ளி பயன்படுகிறது. அதே சமயம், வெள்ளியில் முதலீடு செய்பவர்களும் அதிகரித்து உள்ளனர். அதனால் அதன் தேவை பல மடங்கு உயர்ந்து விட்டது. சமீபத்தில், வெள்ளி நகைகள் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. அடுத்த வருடம் மார்ச் 31ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. FTA எனப்படும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிய வர்த்தகத்துக்கான பொது இயக்குநரகம் கூறி உள்ளது. ஆக, வெள்ளி நகைகள் இறக்குமதி இல்லாததாலும், இப்போது எழுந்துள்ள தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர். . இது மட்டுமில்லாமல், சர்வதேச சந்தையை பொறுத்தும் வெள்ளி விலை மாறுபடுகிறது. டாலர் மதிப்பில் ஏற்படும் ஏற்ற-இறக்கத்தால் வெள்ளியின் விலை அதிகரிக்கிறது. "இப்போதைக்கு, வெள்ளி நல்ல லாபம் தரக் கூடியதாக இருக்கிறது. வெள்ளி நாணயம், வெள்ளி கட்டி, பாத்திரம், நகைகள் என எந்த வடிவிலும் வெள்ளியில் முதலீடு செய்யலாம்.தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் சேமிக்க நினைக்கின்றனர். இதன் விளைவு, வெள்ளி பக்கம் திரும்பி விட்டனர்.தங்கத்தை போலவே, வெள்ளியை இடிஎஃப்-ஆகவும் வாங்கலாம். வெள்ளி ஒரு பாதுகாப்பான முதலீடு. வெள்ளியில் கழிவு இருக்காது. தரம் வாய்ந்ததாகவும் இருக்கும் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர். முதலீட்டாளர்கள், நேரடியாக வெள்ளி வாங்கி வைத்திருப்பதற்கு பதிலாக, இந்த இடிஎஃப் யூனிட்களை வாங்குகின்றனர். இது வெள்ளியை பொருளாக வாங்குவது, சேமிப்பது, பாதுகாப்பது போன்ற சிரமங்களைக் குறைப்பதால், வெள்ளி மீதான முதலீடு அதிகரித்துள்ளது. தங்கம் என்றால், 24 காரட், 22 காரட் என அதன் தரத்தை மதிப்பிட பயன்படுத்தப்படும் அலகு. இதே போல், வெள்ளியை பொறுத்தவரை 99.9% எனும் three nines என்பது தூய வெள்ளியை குறிக்கிறது. இது தவிர, 92.5% ஸ்டெர்லிங் வெள்ளி உள்ளது. இதில் சிறிதளவு தாமிரம் கலக்கப்பட்டிருக்கும். இதுவே வெள்ளி நகைகள் செய்ய பயன்படுகிறது. இந்தியாவில் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி ரூ.136 ஆக இருந்த வெள்ளி, ஒரே மாதத்தில் 40% வரை அதிகரித்துள்ளது. தமிழகத்திலே கடும் பற்றாக்குறை நிலவுகிறதாம்...ஆனால், தங்கத்துடன் ஒப்பிடும் போது, வெள்ளி விலை அதிகபட்ச உயர்வுக்கு போக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. ஏன் தெரியுமா?தங்கத்தை போல, இந்திய ரிசர்வ் வங்கி, வெள்ளியை வாங்காது. சீன மத்திய வங்கி வெள்ளியை வாங்காது. உலகின் எந்தவொரு நாட்டின் மத்திய வங்கியும் வெள்ளியை ரிசர்வ் கரன்சியாக வாங்கி வைக்கப் போவதில்லை. வெள்ளி விலை சரிய ஆரம்பித்தால், அதை தடுக்கவே முடியாது. வெள்ளி விலை சரிந்தால், அதை தடுத்து நிறுத்த யாரும் இல்லை. ஆனால், தங்கத்தின் விலை சரிந்தால், சீனா, ரஷ்யா, ஏன் இந்திய ரிசர்வ் வங்கி கூட உள்ளே புகுந்து வாங்கும். எனவே, ஒரு குறிப்பிட்ட விலைக்கு மேல் சரியாது. ஆனால், வெள்ளியை அப்படி வாங்க ஆள் இல்லை. அதாவது, வெள்ளி விலை சரிய ஆரம்பித்தால் அதை தடுக்க ஆள் இல்லை என்பது நிதர்சனம்... அமெரிக்கா, சீனா இடையே பழி வாங்கும் வரி கொள்கை தொடர்ந்தால், தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் மேலும் கட்டுக்கடங்காமல் உயரும் என சர்வதேச வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர். இதே சமயத்தில், தங்கம் விலை உயர்ந்து கொண்டே போனால், வெள்ளி விலை குறைய வாய்ப்பே இல்லையாம்... குண்டு மணி தங்கம் வேண்டாம். காலுக்கு அழகாக ஒரு வெள்ளிக் கொலுசாவது வாங்குவோம் என சாமானிய மக்கள் இந்த பக்கம் திரும்பினால், இங்கேயும் கொள்ளியை வைத்துவிட்டனர். தங்கம், வெள்ளியை கண்ணிலாவது காட்டுங்கப்பா.