இந்திய பங்கு சந்தைகள் இன்று கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை துவக்கின. மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 1268 புள்ளிகள் சரிந்து 76 ஆயிரத்து 146 புள்ளிகளில் வர்த்தகமானது. அதே போன்று தேசிய பங்குசந்தையான நிப்டியும் 328 புள்ளிகள் சரிந்து 23 ஆயிரத்து 190 புள்ளிகளில் வர்த்தகமானது. நாளை முதல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் அனைத்து பொருட்களுக்கும் கூடுதல் வரியை விதிக்கும் அதிபர் டிரம்பின் முடிவு அமலுக்கு வருவதால் பங்கு சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமாக ஐடி துறை சார்ந்த பங்குகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டன. இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் டிரம்பின் முடிவால் அமெரிக்காவின் உள்நாட்டு பொருளாதாரமும், சர்வதேச வர்த்தகமும் அடிவாங்கும் என கருதப்படுவதால், அதன் தாக்கம் பங்கு சந்தையிலும் எதிரொலித்துள்ளது.