தங்கள் வசம் இருந்த 7 இஸ்ரேலிய பிணைக்கைதிகளை முதற்கட்டமாக விடுவித்தது ஹமாஸ் போராளிகள் குழு. அமைதி ஒப்பந்த முதற்படியாக இஸ்ரேல்-காஸா எல்லையில் செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே, 2023 அக்டோபரில் இருந்து கடும் போர் நடந்து வருகிறது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான நடவடிக்கைகளில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். 'அமைதி ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்க வேண்டும், பிணை கைதிகளை விடுவிக்க வேண்டும்' என, டிரம்ப் கெடு விதித்தார். இதை தொடர்ந்து, எகிப்தின் ஷர்ம் அல் - ஷேக் நகரில், எகிப்து, கத்தார், துருக்கி மற்றும் அமெரிக்காவின் மத்தியஸ்தம் வாயிலாக மூன்று நாட்களாக பேச்சு நடந்தது. இதில், சுமுக முடிவு எடுக்கப்பட்டதை தொடர்ந்து, இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த 10ம் தேதி முதல் தற்காலிக போர் நிறுத்தம் அமலானது.காசாவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான இறுதி கட்ட ஒப்பந்தம், எகிப்தில் கையெழுத்தாகவுள்ளது. தற்போது காசா போர் நிறுத்தம் எதிரொலியாக, பிணைக்கைதிகளை விடுவிக்கும் பணியை ஹமாஸ் படையினர் தொடங்கி உள்ளனர். முதல்கட்டமாக 7 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.மேலும் 13 பிணைக்கைதிகள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவது, காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தின் மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.