ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள், மறைமுகமாக அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வைத்துள்ள குற்றச்சாட்டு, அணு ஆயுதப் போட்டியை மீண்டும் தூண்டும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக ஐநா அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அண்மையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், “உலகின் சில நாடுகள் ரகசியமாக நிலத்தடி அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்றன. குறிப்பாக ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் இந்த சோதனைகளை தீவிரமாக நடத்தி வருகிறது. ஆனால், அவர்கள் இதைப் பற்றிப் பேசுவதில்லை. நாங்கள் ஒரு திறந்த நாடு, எங்களிடம் சுதந்திரமான ஊடகம் உள்ளது. அதனால், நாங்கள் இதை வெளிப்படையாகச் சொல்கிறோம். வட கொரியாவும் கூட சோதனை செய்கிறது. எனவே, அமெரிக்காவும் இதை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது” என கூறியது, சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அணு ஆயுத சோதனைகளைத் தடை செய்யும் CTBT அதாவது Comprehensive Nuclear-Test-Ban Treaty என்ற ஒப்பந்தம் பல நாடுகளால் கையெழுத்திடப்பட்டுள்ள நிலையில், இவ்வாறான சோதனைகள் அந்த ஒப்பந்தத்தின் விதிகளை மீறுவதாகும். இதனால் உலகளாவிய அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.அணு ஆயுத சோதனைகள் நடைபெறும் போது, நிலத்தின் அடியில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்படுகிறது. இது, பல நேரங்களில் சிறிய அளவிலான நில நடுக்கத்திற்கும் காரணமாகிறது. இதனால், சோதனைகள் ரகசியமாக நடத்தப்பட்டாலும், புவிசார் கண்காணிப்பு அமைப்புகள், அவற்றை கண்டறிய முடியும். எனவே, டிரம்ப் கூறியபடி பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் சோதனை செய்துள்ளனவா? என்ற கேள்வி, இவ்வாறான தொழில்நுட்ப தரவுகள் மூலம் உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம் என உலக நாடுகள் தெரிவித்துள்ளன. இதுமட்டுமின்றி ட்ரம்ப் இவ்வாறான குற்றச்சாட்டை வைத்துள்ளதால், ரஷ்ய அதிபர் புதின் அமெரிக்காவுடன் இருந்த புளூட்டோனியம் ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இந்த ஒப்பந்தம் ராணுவ பயன்பாட்டுக்கான அணு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையில் இருந்தது. இதனால் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே புதிய பதற்றம் உருவாகியுள்ளது.இறுதியாகப் பார்க்கப் போனால், டிரம்ப் வைத்துள்ள இந்த குற்றச்சாட்டு, அணு ஆயுதப் போட்டியை மீண்டும் தூண்டும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தால், உலக அமைதி மீண்டும் ஆபத்தில் சிக்கக்கூடும் என ஐநா அமைப்புகள் அச்சம் தெரிவித்துள்ளன.