நடிகை தொடர்ந்த வழக்கில், சீமான் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டதால், வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு, ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் பிரபல நடிகை ஒருவர் புகார் செய்தார். இதன் அடிப்படையில், சீமான் மீது 2011ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்த 2023ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவுக்கு எதிராக, சீமான் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் கடந்த ஜூலை 21ஆம் தேதி மீண்டும் விசாரித்தது. சீமான் தரப்பில் வழக்கு விசாரணையை தள்ளி வைக்கக் கோரி, ஏற்கனவே கடிதம் வழங்கி இருந்த நிலையில், நடிகை சார்பில் வக்கீல் ஆஜராகி பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு இடமில்லை என்று கூறினார். இந்த வழக்கு கடந்த 12ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, நடிகையிடம் சீமான் வரும் 24ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும், வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நீதிமன்றம் கூறியது. இந்நிலையில், சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், நடிகை குறித்து இனி கருத்து தெரிவிக்க மாட்டேன் என்றும், நடிகை குறித்த கருத்துக்களை திரும்ப பெறுவதாகவும் சீமான் தரப்பு கூறியுள்ளது. சீமானுக்கு எதிரான பாலியல் புகாரை திரும்ப பெறுவதாகவும் நடிகை தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.