கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு மாதத்திற்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் வகுப்புகளுக்கு சென்றனர். 400க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய வயநாடு நிலச்சரிவில், வெள்ளார்மலை, முண்டக்கை அரசு பள்ளிகள் அடியோடு உருக்குலைந்தன. இந்நிலையில் வெள்ளார்மலை பள்ளியில் படித்த 546 மாணவ, மாணவிகளுக்கு மேப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியிலும், முண்டக்கை பள்ளியில் படித்த 61 மாணவ, மாணவிகளுக்கு மேப்பாடி ஏபிஜே ஹால் கட்டிடத்திலும் இன்று முதல் வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. கல்வி அமைச்சர் சிவன்குட்டி, முண்டக்கை மற்றும் சூரல்மலையிலிருந்து 3 அரசு பேருந்துகளில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து சென்றார். புதிய நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.