சாம்சங் நிறுவனத்திற்கு எதிரான ஊழியர்களின் போராட்டம், கம்யூனிஸ்ட்டுகளுக்கும், திமுகவுக்கும் இடையே உரசலை உருவாக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இரவோடு, இரவாக பந்தல் அகற்றம், கைது நடவடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமாக இருக்கும் சி.ஐ.டி.யூ.வின் போராட்டத்தை தமிழக அரசு கையாளும் விதம் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்தைத் தேடித் தந்ததோடு, கம்யூனிஸ்ட்டுகளையும் அதிருப்தியில் ஆழ்த்தியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. 12 மணி நேர வேலை...பத்தாத சம்பளம் என்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சாம்சங் நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் ஒரு மாதத்தை கடந்து தீவிரமாகி வருகிறது. தொழிற்சங்கம் அமைக்க வலியுறுத்தி, ஊழியர்கள் நடத்திய போராட்டம் வலுவடைந்ததை அடுத்து, முதலமைச்சர் ஸ்டாலின் தலையிட்டு, அமைச்சர்கள் TRB ராஜா, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்தார். இந்த குழு நடத்திய முதல் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.இதனையடுத்து, திங்களன்று நடந்த அடுத்தகட்டப் பேச்சுவார்த்தையில், ஊழியர்களின் 14 அம்ச கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட சாம்சங் நிறுவனம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமாக இருக்கும் சி ஐ டி யூ தொழிற்சங்கம் அமைக்கும் கோரிக்கையை மட்டும் ஏற்க மறுத்து விட்டது.இதனிடையே, போராட்டம் நடத்திய ஒரு தரப்பினர் வாபஸ் பெற்றதாகவும், மற்றொரு தரப்பினர் மட்டுமே போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்பட்டது. இது தொடர்பான பேட்டிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகின. ஆனால், சாம்சங் நிர்வாகத்துக்கு ஆதரவான இந்தப் பேட்டிகளின் பின்னணியில் ஆளுங்கட்சி இருப்பதாகக் கொந்தளிக்கிறது போராட்டக் களத்தில் உள்ள, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கமான சி ஐ டி யூ தரப்பு... இந்த சூழலில் 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சாம்சங் நிறுவனத்தில் தொழிற்சங்கம் பதிவு செய்வது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால், தற்போதைக்கு எந்த முடிவும் எடுக்க முடியாது என்றார். சாம்சங் நிறுவனம் பல வகைகளில் இறங்கி வந்தும் கூட, சி.ஐ.டி.யூவினர் தான் தொடர்ந்து போராட்டம் நடத்துவதாக கூறியதோடு, இந்த போராட்டம் தமிழகத்திற்கு வரும் வெளிநாட்டு முதலீடுகளை பாதிக்கும் என்றார். டி.ஆர்.பி.ராஜாவின் பேச்சு சாம்சங் நிறுவன விவகாரத்தில் திமுக அரசுக்கும், கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யூ.க்குமே உரசல் எழ காரணமாக அமைந்தது. டி.ஆர்.பி.ராஜாவின் பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்த சி.ஐ.டி.யூ.மாநில தலைவர் சௌந்தரராஜன், தொழிற்சங்கம் அமைக்க சாம்சங் நிறுவனம் சம்மதித்தாலே நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கு தானாகவே தள்ளுபடியாகிவிடும் என பதிலளித்தார்.