பீகார் மாநில மக்களுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் வெறுப்பை யாரும் மறக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.பீகார் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி 2வது முறையாக, சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். திறந்தவெளி வாகனத்தில் வந்த பிரதமர் மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருடன் முதல்வர் நிதிஷ் குமார், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரியும் இருந்தனர். கயாஜியில் நடந்த நிகழ்ச்சியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். வடக்கு மற்றும் தெற்கு பீகாரை இணைக்கும் விதமாக, கங்கை நதியின் மீது 6 வழிப்பாலத்தையும் அவர் திறந்து வைத்தார்.கயா - டில்லி இடையிலான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் வைஷாலி - கோடர்மா இடையிலான ரயில் சேவையையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்நிகழ்ச்சியின் போது, பிரதமர் மோடி பேசியதாவது:புனித மண்ணான கயாஜியில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இவை, எரிசக்தி, சுகாதாரம் மற்று நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களை உள்ளடக்கியது. இந்த திட்டங்கள் அனைத்தும் பீகார் மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும்.ஒரு காங்கிரஸ் முதல்வர், பீகாரைச் சேர்ந்த மக்களை தனது மாநிலத்திற்குள் நுழைய விடமாட்டேன் என்று கூறியிருந்தார். பீகார் மக்களுக்கு எதிரான காங்கிரஸின் வெறுப்பை யாரும் மறக்க முடியாது. பீகார் மக்கள் மீது காங்கிரஸின் மோசமான நடத்தையை பார்த்தும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. பீகாரின் இளைஞர்கள் தங்கள் மாநிலத்திலேயே வேலைவாய்ப்பை பெறுவதற்கும், நன்மதிப்புடன் தங்கள் பெற்றோருடன் தங்கியிருக்கும் வகையிலும் என்டிஏ கூட்டணி கடுமையாக உழைக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.