வாரணாசியில் ரோப்வே சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்துள்ளது. இந்தியாவிலேயே இது முதன்முறை. பறக்கலாம்... மிதக்கலாம்... ரசிக்கலாம்... என்று பாட்டு பாடிய படியே, எவ்வித நெரிசலும் இன்றி, உரசலும் இன்றி பயணிக்கலாம். பொதுவாகவே, நடைபாதையில் தொடங்கி, சாலை வழி, ரயில் வழி, வான் வழி, கடல் வழி என பயணத்தை தேர்ந்தெடுக்கலாம். இவை எல்லாமே நெரிசல் உள்ளிட்ட சில உபாதைகளை சிலருக்கு தந்து விடும். இந்நேரத்தில், நம்மூரில், மலைக் கோயில்களுக்கு ரோப் காரில் செல்லும் போது புதிய அனுபவத்தை பெறலாம். இதே மாதிரியான பயணம், சாலை வழிகளில் இருந்தால், நீண்ட தூரத்திற்கு அமைக்கப்பட்டால்... பறக்கலாம்... மிதக்கலாம்... ரசிக்கலாம்... ஆம்... வாரணாசியில் இந்தியாவிலேயே முதன்முறையாக அமைக்கப்பட்டுள்ளது, Urban Public Transport Ropeway Project. இந்தியாவின், முதல் நகர்ப்புற பொது போக்குவரத்து ரோப்வேயின் சோதனை ஓட்டம், கடந்த வியாழக்கிழமை அக்டோபர் 2ஆம் தேதி, வாரணாசியில் நடந்துள்ளது. சுமாராக, ரூ.815 கோடி செலவில் கட்டப்பட்ட 3.8 கிமீ சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த பாதையில், ஐந்து நிலையங்கள் உள்ளன. சுமாராக, 148 gondolas இணைக்கப்பட்டுள்ளது. அதாவது அந்தரத்தில் தொங்கும் பெட்டிகள். இந்த ரோப்வே தினமும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பயணிகளை ஏற்றிச் செல்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது நகரம் முழுவதும் இணைப்பை உருவாக்க போகிறது. வாரணாசி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் புல்கிட் கார்க் (Pulkit Garg) கூறி இருப்பதாவது:இங்கே, விசாலமான காத்திருப்பு பகுதி, பயணிகளுக்கு ஏற்ற வசதிகளுடன் ஐந்து நிலையங்கள் இருக்கிறது. 15 ஆண்டுகளுக்கான செயல்பாடு மற்றும் பராமரிப்பு திட்ட செலவின் ஒரு பகுதியாகும். இங்குள்ள அனைவரும் இதைப் பற்றி மிகவும் உற்சாகமாக பேசுகின்றனர். இது முற்றிலும் ஒரு பசுமையான உள்கட்டமைப்பு. 5 நிலையங்களைக் கொண்ட 3.8 கி.மீ நீளமுள்ள பாதை உள்ளது. இந்த அனைத்து நிலையங்களிலும், பயணிகளுக்காக, பல்வேறு வசதிகள் கிடைக்கும். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் உள்ள HAIன் இணை அமைப்பான NHLML என்கிற தேசிய நெடுஞ்சாலை லாஜிஸ்டிக்ஸ் மேலாண்மை லிமிடெட், இந்த ரோப்வேயை உருவாக்கி வருகிறது. வாரணாசிக்கு சூப்பரான தொலை நோக்கு திட்டம் வருகிறது. இதை அனைவரும் பொறுப்பான முறையில் பயன்படுத்துங்கள். இவ்வாறு புல்கிட் கார்க் கூறி உள்ளார். வாரணாசியில், நகர்ப்புற போக்குவரத்தை கணிசமாக உயர்த்தும் இந்த ரோப்வே திட்டம், போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்திவிடும். வாரணாசிக்கு வரும் சுற்றுலா பயணிகளையும் ஈர்த்திடும்.இது புதுமை மட்டுமல்ல, சுற்றுச் சூழலுக்கு உகந்த வடிவமைப்பு என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக.. வாரணாசிக்கு போனால், பறக்கலாம்... மிதக்கலாம்... ரசிக்கலாம்...