தங்க நகைகளை அடமானமாக வைத்து, கடன் பெறுவதில் கட்டுப்பாடுகளை இந்திய ரிசர்வ் வங்கி அமல்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் தங்கத்தின் விலை, ஜெட் வேகத்தை காட்டிலும், போட்டி போட்டுக் கொண்டு உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அவசரத்திற்கு, கைவசம் உள்ள தங்க நகைகளை அடகு வைக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, தங்க நகைகளை வாங்கி, கடன் வழங்குவதில் வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு புதிய வரைவு விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அமல்படுத்தி உள்ளது. நகை அடமான கடனில் முறைகேடு நடப்பதை தடுக்கும் வகையில், புதிய விதிகள் கொண்டு வந்திருப்பதாக, ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், இந்த கட்டுப்பாடுகள், எளிய, நடுத்தர குடும்பங்கள் மத்தியில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று, நுகர்வோர் அமைப்புகள் கணித்துள்ளது.வங்கி மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு ஆர்பிஐ சுற்றறிக்கை அனுப்பியது. ஆர்பிஐ முதன்மைப் பொது மேலாளர் தருண் சிங் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், தங்க நகைக் கடனில் முறைகேடு, அதாவது, Irregular practices நடப்பதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. என்ன சொல்லி இருக்கிறது சுற்றறிக்கை?தங்க நகை கடன் வாங்கும் போது, தங்கத்தை மதிப்பிடுவதில் குறைபாடு, வாடிக்கையாளர் பணம் செலுத்த தவறினால், நகைகளை ஏலம் விடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. இப்படி ஏகப்பட்ட குறைபாடு...இதனால், 'வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள், நகைக்கடன் தொடர்பான தங்களின் செயல்முறை மற்றும் கொள்கைகளை விரைந்து மதிப்பீடு செய்ய வேண்டும்’ என்று சுற்றறிக்கை கூறுகிறது. இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, இந்திய ரிசர்வ் வங்கியின் மூத்த மேற்பார்வை மேலாளரான SSMக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சுட்டிக்காட்டி, ஒன்பது கட்டுப்பாடுகள் அமலாகி உள்ளது. தங்கத்தை அடமானம் வைக்கும் போது அதன் மதிப்பில் 75 சதவீதம் மட்டும் கடனாக பெறலாம். அதாவது, நகையின் மதிப்பு 100 ரூபாய் என்றால், 75 ரூபாய் வரை கடன் தரப்படும். ரூ.5 லட்சத்திற்கு மேல், நகை கடன் வாங்கினால், இந்த சதவீதம் சற்று மாறுபடும். அடமானம் வைக்கப்படும் நகையின் உரிமையாளர் என்பதற்கான ஆதாரத்தை கடன் வாங்கும் நபர், வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.தங்க நகையின் தரம், தூய்மை ஆகியவை குறித்து கடன் பெறுபவருக்கு வங்கியில் இருந்து சான்று வழங்க வேண்டும். இதில், வங்கியும் கடன் பெறுபவரும் கையொப்பமிட்ட சான்றிதழின் நகல் வங்கியில் வைக்கப்பட வேண்டும்.தங்க நகைகளில், 22 காரட் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டும் கடன் வழங்கப்படும். 24 காரட் தங்கமாக இருந்தாலும் 22 காரட்டின் மதிப்பிலேயே எடையைக் கணக்கிட்டு கடன் வழங்க வேண்டும்.தங்க நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். ஆபரண நகை அல்லாத காயின்ஸ், தங்க கட்டிகளுக்கு கடன் இல்லை.ஒரு கிலோ வரையிலான தங்க நகைகளை மட்டுமே வங்கியில் அடமானம் வைக்க முடியும். நகை கடன் வழங்கும் போது கடன் தொடர்பான அனைத்து தகவல்களும் ஒப்பந்தத்தில் இடம் பெற்றிருக்க வேண்டும்.செலவு மற்றும் வருமானம் தொடர்பான இரு வகை கடன்களுக்கு இது பொருந்தும். செலவு வகை கடன் என்பது அவசர தேவைக் கடன்களாகவும், வருமான வகை கடன் என்பது முதலீடு செய்வதற்காக பெறப்படும் கடன் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது. தங்க நகைக் கடனை திருப்பிச் செலுத்திய உடன் 7 வேலை நாளில், நகையை வங்கியில் இருந்து ஒப்படைக்க வேண்டும். அவ்வாறு ஒப்படைக்கவில்லை என்றால் அடுத்து வரும் ஒவ்வொரு நாளுக்கும் ஐந்தாயிரம் ரூபாயை வாடிக்கையாளருக்கு அபராதமாக தரவேண்டும். வட்டியை மட்டும் கட்டிவிட்டு, ஒரு வருடம் கடந்து, திருப்பி நகைகளை மறு அடமானம் வைக்க முடியாது. அதாவது நோ Renewal.அடமானம் வைத்துள்ள தங்க நகைகளை முழுமையாக மீட்ட பின்னரே, மீண்டும் அவற்றை அடமானம் வைக்க முடியும். அதாவது, தங்க நகைகளை மீட்காமல், அடமான காலத்தை நீட்டிக்க முடியாது. இதில், புல்லட் ரீபேமென்ட் என்று கூறப்படுவது, அசல் மற்றும் வட்டியை மொத்தமாக 12 மாதத்தில் செலுத்தி விட வேண்டும். இல்லை என்றால், ஏலம் தான்.நகைகளை ஏலத்துக்கு கொண்டு செல்லும் போது இதுகுறித்து வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால் வங்கி மீது வழக்கு தொடரலாம்.வெள்ளி நகைகளுக்கும் கடன் பெறலாம். அதில், 999 தரத்தில் உள்ள வெள்ளி நகைகளை மட்டும் அடமானம் வைக்க முடியும்.நகை வாங்கியதற்கான ரசீது இல்லாத பட்சத்தில், நகை தன்னுடையது தான் என்பதை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழை வங்கியிடம், வாடிக்கையாளர் தரவேண்டும். ஆடிட்டர் போன்றவர்களிடம் இந்த உறுதிமொழிப் பத்திரத்தை வாங்கி, வங்கியிடம் சமர்ப்பிக்கலாம்.இந்த விதிமுறைகளை ஆர்பிஐ தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அடமானம் வைப்பவர்களுக்கு, சில கட்டுப்பாடுகளை தவிர, இது மிகவும் பாதுகாப்பான அம்சம் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகின்றனர். ஆக, குண்டுமணி தங்கம் இருந்தாலும், தேவைப்படும் நேரத்தில் பணமாக மாற்றிவிட முடியும் என்று உள்ளவர்களுக்கு, இது ஷாக் ஆன விஷயம் தான்.இதில், சில நடைமுறைகள் சரி என்றாலும், சாமானியர்களுக்கு இனிமேல், விலை அதிகரிப்பால் தங்க நகைகள் மட்டுமின்றி, தங்க நகை கடனும் கூட எட்டாக்கனி தான், என்று கூறுகின்றனர்.