வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வலியுறுத்தி, அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது; கடந்த அதிமுக ஆட்சியில், இபிஎஸ் முதலமைச்சராக இருந்தபோது, வன்னியர் சங்கமும், பாமகவும் அற வழியில் நடத்திய போராட்டத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, சில விஷமிகள் நீதிமன்றம் வரை சென்று வன்னியர்களின் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு தடையாணை பெற்று, இட ஒதுக்கீடு சட்டத்தை நடைமுறை படுத்தவிடாமல் செய்தனர். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்தும், பலமுறை கடிதங்கள் மற்றும் அறிக்கை மூலம் சாதிவாரி கணக்கீட்டை நடத்தி, வன்னியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பங்கீட்டை அதிகப்படுத்தி தர வேண்டும் என்றும், 10.5 சதவீத தனி ஒதுக்கீட்டை உடனே பெற நீதிமன்றத்தில் போதுமான தரவுகளை கொடுத்து தடையாணையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆனால், நமது நியாயமான கோரிக்கை, கூக்குரலுக்கு தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. இது, கடும் கண்டனத்துக்குரியது. வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். அனைத்து மக்களுக்குமான சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்த வேண்டும் என்பதை முன் வைத்து டிசம்பர் 5ஆம் தேதி காலை முதல் மாலை வரை அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவகம் முன்பு பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.