தீபாவளி பண்டிகைக்கு, சில நாட்களே உள்ள நிலையில், புத்தாடை வாங்க கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், தித்திக்கும் தீபாவளியை வரவேற்கும் விதமாக சுவையான இனிப்பு வகைகளை தயாரிக்கும் பணிகளில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.விழுப்புரம்: ஸ்வீட் நிறுவனங்கள் பெண்களை கொண்டு தீபாவளிக்கான இனிப்பு மற்றும் கார வகைகளை இரவு, பகலாக தயாரித்து வருகின்றனர். குறிப்பாக, தேங்காய் பால் முறுக்கு, வெள்ளை முறுக்கு, எள்ளடை, மினி பாதுஷா, நெய் லட்டு தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருச்சி: மணப்பாறை முறுக்கு என்றால் தனி சுவைதான், அந்த வகையில், தீபாவளி நேரத்தில் மணப்பாறை முறுக்கிற்கு மவுசு பன்மடங்கு அதிகரித்துள்ளது. அரும்பு முறுக்கு, தேன்குழல் முறுக்கு, கார முறுக்கு உள்ளிட்ட பல்வேறு சுவைகளில் முறுக்கு தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று, விற்பனைக்கு தயாராகி வருகிறது.மதுரை; தித்திக்கும் தீபாவளியை கொண்டாடும் வகையில் காரம் மற்றும் இனிப்பு தயாரிக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. கோதுமை அல்வா, பாம்பே அல்வா. மில்க் ஸ்வீட்ஸ், அஜ்மீர் பர்பி.முந்திரிகேக் உள்ளிட்ட இனிப்பு வகைகளை ஸ்வீட் கடைகளில் ஊழியர்கள் தீவிரமாக தயாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி; தீபாவளியை முன்னிட்டு பலகாரங்கள் விற்பனை அதிக அளவில் இருக்கும் என ஸ்வீட் கடையினர் எதிர்ப்பார்ப்பதால், இனிப்பு உள்ளிட்டவற்றை வழக்கத்தைவிட அதிக அளவில் தயாரித்து வருகின்றனர். முந்திரி கொத்து,குழி அப்பம் உள்ளிட்ட விதவிதமான இனிப்பு வகைகள் மற்றும் கார வகைகளை ஸ்வீட் கடையினர் இரவு, பகலாக தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கடலூர்: நெருங்கி வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலூரில் பெண்கள் குழுக்களாக சேர்ந்து இனிப்பு வகைகளை ஆர்வத்துடன் தயாரித்து வருகின்றனர். எந்தவித செயற்கை வண்ணங்களும் சேர்க்காமல் லட்டு, பாதுஷா மற்றும் மைசூர் பாக்கு, கார வகைகள் உள்ளிட்ட பொருட்களை பெண்கள் தங்கள் கை வண்ணத்தில் ஆர்வத்துடன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.