தகவல் தொடர்பு சேவைக்காக உருவாக்கப்பட்டுள்ள, அமெரிக்காவின் BLUE BIRD 6 செயற்கைகோளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, அதனை புவிவட்ட பாதையில் நிறுத்தி உள்ளது.அடுத்த தலைமுறை தகவல் தொடர்பு செயற்கைக்கோளான BLUE BIRD-6 சிறப்பம்சங்கள் என்னென்ன? என்பதை இந்த செய்தி தொகுப்பில் காணலாம். அமெரிக்காவைச் சேர்ந்த ஏஎஸ்டி நிறுவனம், தகவல் தொடர்பு சேவைக்காக 6,100 கிலோ எடையில் BLUE BIRD-6 என்ற செயற்கைக்கோளை வடிவமைத்துள்ளது. தொலைதூர கிராமங்களுக்கு செல்போன் மற்றும் அதிவேக இணையதள சேவைகளை வழங்க உதவும் இந்த செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்ணில் செலுத்தியது தான் இதன் ஹைலைட்.இந்தியாவின் பாகுபலி ராக்கெட் எனப்படும் LVM3-M 6 மூலம் விண்ணில் செலுத்துவதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் செவ்வாய்கிழமை காலை தொடங்கியது.ராக்கெட் மற்றும் செயற்கைக்கோளின் செயல்பாடுகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர். திட்டமிட்டபடி புதன்கிழமை காலை 8.54 மணிக்கு LVM3-M6 ராக்கெட் விண்ணில் பாய தயாராக இருந்தபோது, விண்வெளி குப்பைகள் காரணமாக 90 விநாடிகள் தாமதத்திற்கு பின்னர் ஏவப்பட்டது. சீறிப் பாய்ந்த ராக்கெட்டிலிருந்து 15 நிமிடத்திற்கு பின் செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிந்து, 520 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையை அடைந்தது. விண்வெளி மையத்திலிருந்து, இதனை கவனித்து கொண்டிருந்த இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் அந்த தருணத்தை கைதட்டி கொண்டாடினர். இதன் பின்னர் BLUE BIRD செயற்கைகோள் திட்டமிடப்பட்ட அதன் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாகவும் துல்லியமாகவும் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக அறிவித்த இஸ்ரோ தலைவர் வி.நாராயணன், பாகுபலி ராக்கெட்டின் பயணப் பாதையில் இருந்த விண்வெளிக் கழிவுகள் மற்றும் பிற செயற்கைக்கோள்களுடன் மோதல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருந்ததே தாமதத்திற்கு காரணம் என்றார். தாழ்வான புவி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படும் இந்த செயற்கைக்கோள் மூலம் செல்போன் சிக்னல் கோபுரங்கள் இல்லாமலேயே, மொபைல் போன்களுக்கு நேரடியாக 4G மற்றும் 5G சிக்னல்களை வழங்கும் வகையில் அதன் தொழில்நுட்பம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலிருந்து ஏவப்பட்ட செயற்கைக் கோள்களிலேயே மிக அதிக எடை கொண்ட செயற்கைக்கொள் இதுதான் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு சுமார் 4,400 கிலோ எடை கொண்ட தொலைதொடர்பு செயற்கைக்கோள் 0 3 , LVM3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.மேலும், இந்த மிஷன் இந்தியாவிற்கு தொழில்நுட்ப முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் விண்வெளி துறையின் ஜாம்பவான் என தன்னை கூறிக்கொள்ளும் அமெரிக்கா, தனது செயற்கைக்கோளை ஏவ இந்தியாவை நாடியிருப்பது மற்ற நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியாவால் இவ்வளவு பெரிய செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முடியும் என்பதை BLUE BIRD-டை வைத்து இஸ்ரோ நிரூபித்து உள்ள இத்தருணம் இந்தியர்களான நாம் ஒவ்வொருவருக்கும் பெருமைக்குரிய தருணம். இந்தியாவின் விண்வெளித் துறையில் இது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் என்று பிரதமர் மோடி பாராட்டினார். இது இந்தியாவின் கனரக ஏவுதல் திறனை வலுப்படுத்துவதாகவும், உலகளாவிய வணிக ஏவுதலில் இந்தியா வளர்ந்து வருவதை உறுதிப்படுத்துவதாகவும் பிரதம் மோடி கூறினார்.