தனியார் நிலவணிக நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை பல கோடி உயர்த்தும் நோக்குடன் நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பேருந்து நிலையத்தை இடம் மாற்ற முயற்சிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.இராசிபுரம் நகரின் மையப் பகுதியில் அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தை, நகரத்திற்கு வெளியே 8.5 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்க நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், இராசிபுரம் நகர மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடும் இத்திட்டத்தை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.இத்திட்டத்தின் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட பேரங்கள், ஊழல்கள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடவும் வலியுறுத்தியுள்ளார்.