நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சாலைகளில் திரண்டு, அரசுக்கு எதிராக, தீவிர போராட்டத்தில் குதித்தனர். என்ன நடக்கிறது நேபாளத்தில்?இந்தியாவிற்கு அருகில் உள்ள நேபாளத்தை அலற வைத்துள்ளனர், அந்நாட்டின் ஜென் Z தலைமுறையினர்(Generation Z). சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்ததை எதிர்த்து, போராட்டம் வலுத்துள்ளது. நேபாளத்தில், 1997 முதல் 2012 வரை பிறந்தவர்கள் ஜென் Z தலைமுறையினர் என்று அழைக்கப்படுகின்றனர். இந்த ஜென் Z தலைமுறையினர் தான் மிகப் பெரிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஒரே நேரத்தில், தலைநகர் காத்மாண்டு மற்றும் முக்கியப் பகுதிகளில் திரண்ட இளைஞர்கள் காவல்துறையினரை திக்குமுக்காட வைத்தனர்.நிலைமை கட்டுக்கடங்காமல் செல்லவே, தடியடி தொடங்கி துப்பாக்கிச் சூடு வரை சென்றதில், இதுவரை 16 பேர் உயிரிழந்ததாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 4ஆம் தேதி முதலே நேபாளத்தில் சமூக வலைதள தடை அமலில் உள்ளது. ஆனால், அதற்கெதிராக அமைதிவழி போராட்டங்கள் பல நடந்தும் கூட அரசு கண்டுகொள்ளவில்லை. இதனால், போராட்டம் மிகப் பெரியளவில் வெடித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கூறுகின்றனர்.ஜென் இசட் தலைமுறையினரின் இந்த தீவிர போராட்டத்துக்கு ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட 26 சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்தது காரணமாக கூறப்படுகிறது. நேபாள பிரதமராக அந்நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவரான கே.பி.சர்மா ஒலி, கடந்த 2024ஆம் ஆண்டு பதவியேற்றார். இவரது அரசு, சமூக வலைதளங்கள் பலவும் நேபாள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பதிவு செய்யாவிட்டால் அவற்றிற்கு தடை விதிக்கப்படும் என்று அறிவித்தது. நாட்டின் பாதுகாப்புக்காக அவை பதிவு செய்வதுடன், வரியும் செலுத்த வேண்டும் என்றது. இதற்கு எதிர்பு கிளம்ப, உச்ச நீதிமன்றம் வரை சென்று, தான் நினைத்ததை சாதித்துக் கொண்டது சர்மா ஒலி அரசு. சமூக வலைதளங்களுக்கு, 4ஆம் தேதி முதல் தடை அமலானது. ஆனால், சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பு, இது ஊழலை எதிர்ப்போர், பேசுவோரை மட்டுப்படுத்தும் முயற்சி என்றும், ஆட்சியின் அவலத்தை சமூக வலைதளங்களில் இளைஞர்கள் விமர்சிப்பதால், தடை விதிக்கப்பட்டுள்ளது, என்கின்றனர்.இளைஞர்களின் கூட்டத்தை பார்க்கும்போது, சமூக வலைதள தடையையும் தாண்டி, போராட்ட பின்னணியில் வேறு சில பிரச்சினைகளும் இருக்கிறதோ என்று, யோசிக்க வைக்கிறது என்று சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர். இந்த நிலையில், போராட்டக்காரர்களை ஒடுக்க துப்பாக்கிச் சூடு நடத்தியது போதாது, கலவரக்காரர்களை கண்டதும் சுடுங்கள் என்றும் நேபாள அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நேபாள நாடாளுமன்றத்தை நோக்கி போராட்டக்காரர்கள் படையெடுப்பதால், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், பிரதமர் ஒலி பதவி விலக வேண்டும், அவர் நேபாளத்தை விட்டே வெளியேற வேண்டும் என்று இளைஞர்கள் கோஷமிட்டு வருகின்றனர். நேபாள இளைஞர்கள், பல ஆண்டுகளாக தேக்கி வைத்த மன அழுத்தம் தான் இந்தப் போராட்டத்துக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. காரணம், சுமார் 3 கோடி மக்கள் மட்டுமே வசிக்கும் குட்டி நாடான நேபாளத்தில், பெரும்பாலான இளைஞர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர். தினந்தோறும், சுமார் 2000க்கும் மேற்பட்டோர், நேபாளத்தில் இருந்து வேலைவாய்ப்பு தேடி வெளியேறுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. உள்நாட்டிலேயே இருப்பவர்கள், சமூகவலை தள தடையால், தங்களின் பொருளாதார, படைப்பாக்க சுதந்திரம் தடைபட்டதாக குமுறுகின்றனர். இதையும் பாருங்கள்: ஊரடங்கு.. கண்டதும் சுட உத்தரவு! கடும் பரபரப்பு | Nepal | Social Media ban | Kathmandu