’பேட் கேர்ள்’ திரைப்படத்துடன், தனது Grass Root Film company தயாரிப்பு நிறுவனத்தை இழுத்து மூட உள்ளதாக இயக்குனர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் வெற்றி மாறன் கூறி இருப்பதாவது: ஒரு தயாரிப்பாளராக இருந்தால், எதிர்வினைகளையும் சந்திக்க வேண்டும். இது, படத்தின் வியாபாரத்தை பாதிக்கும் என்பதால், தயாரிப்பாளராக இருப்பது மன அழுத்தம் தரக்கூடியதாக உள்ளது. என்னை மாதிரி உள்ளவர்களுக்கு, படத் தயாரிப்பு என்பது மிகவும் சவாலான ஒரு விஷயம். பல நேரம் கடன் வாங்கித்தான் படம் எடுக்கிறோம். ஒரு இயக்குனராகப் படம் இயக்குவது, எளிது. ஆனால் ஒரு தயாரிப்பாளராக இருப்பது மிகவும் கடினம்.ஏற்கனவே ’மனுஷி’ திரைப்படம், நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்தது. இனி என்ன பிரச்சனை வரப்போகிறது எனத் தெரியவில்லை. ’பேட்கேர்ள்’ திரைப்படமும், தணிக்கைக்கு சென்று, வயது வந்தவர்கள் பார்க்கும் படம் என சான்றிதழைப் பெற்றுள்ளது. இதனால், ’பேட்கேர்ள்’ திரைப்படம் தான் எனது கடைசி தயாரிப்பு என்கிற முடிவை எடுத்திருக்கிறேன். இனிமேல், கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி திரைப்படங்களைத் தயாரிக்காது. கடையை இழுத்து மூடுகிறோம். இவ்வாறு இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார்.’பொல்லாதவன்’ திரைப்படத்தை இயக்கி, திரைப்பட இயக்குனராக அறிமுகமான வெற்றிமாறன், ’ஆடுகளம்’ படத்தை இயக்கி தேசிய விருதை வென்றார். ’விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை 1 மற்றும் 2’ என அடுத்தடுத்து படங்களை இயக்கினார்.Grass Root Film company என்ற தயாரிப்பு நிறுவனத்தை வெற்றி மாறன் நடத்தி வந்தார். "உதயம் என்.எச்.5, பொறியாளர், கொடி, லென்ஸ், அண்ணனுக்கு ஜே" உள்ளிட்ட படங்களை தயாரித்தார். கடைசியாக ஆன்ட்ரியா நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான ’அனல் மேலே பனித்துளி’ என்ற படத்தை தயாரித்திருந்தார். தற்போது, ’மனுஷி, பேட்கேர்ள்’ ஆகிய படங்களால், வழக்குகளை சந்தித்த நிலையில், இந்த அதிரடி முடிவை வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.