இந்திய விமானப் படையின் சிம்ம சொப்பனமாக இருந்த பாதுகாப்பு அரக்கன், கார்கில் போரில் எதிரிகளை குறிவைத்து துல்லியமாக அழித்த வான் காவலன், என்னை தொட எவனுமே இல்லை என 60 ஆண்டுகளாக குண்டு மழைகளால் கர்ஜித்த மிக்-21(MiG-21) போர் விமானம் ஓய்வு பெற்றுள்ளது. இந்தியாவுக்கே பாதுகாப்பு அரணாக இருந்த மிக்-21 விமானத்தின் சுவாரசிய தகவல்களை பார்ப்போம்.ஒவ்வொரு நாட்டின் பாதுகாப்புக்கும் ஆயுத பலம் அவசியம். இந்த வகையில், இந்தியாவின் பலமிக்க ஆயுதமாக பார்க்கப்பட்டது மிக்-21 போர் விமானம். சோவியத் ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட இந்த போர் விமானம் முதன் முதலாக 1963ஆம் ஆண்டு, இந்தியாவை பாதுகாக்கும் பணியில் இணைந்தது. கார்கில் போர், பாகிஸ்தானிற்கு எதிரான போர்களில் இந்தியாவை பாதுகாக்கும் காவலனாக நின்று, வானிலேயே எதிரிகளை அழித்த மிக்-21 போர் விமானம் இறுதியாக 2019ஆம் ஆண்டு பாகிஸ்தானிற்கு எதிரான பால்கோட் சண்டையிலும் தனது அதிரடி தாக்குதலை வெளிப்படுத்தியது. இந்தியாவின் அசுர பலமிக்க ஒரு ஆயுதமாக பார்க்கப்பட்ட மிக்-21 போர் விமானம, செப்டம்பர் 26ஆம் தேதியுடன் பாதுகாப்பு பணியில் இருந்து ஓய்வு பெறும் என அறிவிக்கப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளாக, இந்திய மக்களின் பாதுகாப்புக்காக பணியாற்றிய மிக்-21 விமானத்துக்கு விமானப்படையினர் கனத்த இதயத்துடன் பிரியா விடை அளித்தனர். தேசத்துக்காக மிக்-21 விமானம் ஆற்றிய பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக, அதன் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டதுடன், வானில் மூவர்ணங்களில் ஜெட் விமானங்கள் பறந்து ராயல் சல்யூட் கொடுத்தன. சண்டிகர் விமானப்படை தளத்தில் இருந்து, மிக்-21 விமானம் தனது சேவைக்கு ஓய்வு கொடுத்துள்ளது. இறுதிப்பயணத்தை மேற்கொண்ட மிக்-21 போர் விமானத்திற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை ராணுவ தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி மற்றும் கடற்படை தலைவர் அட்மிரல் தினேஷ் திரிபாதி உள்ளிட்டோர் பிரியா விடை அளித்தனர்.விமானப்படை தளபதி மார்ஷல் அமர் பிரீத் சிங் மற்றும் விமான படைத் தலைவர் பிரியா சர்மா இறுதியாக மிக்-21 விமானத்தை இயக்கி எமோஷ்னல் விடை கொடுத்தனர். இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும் நேரங்களில், 6 தசாப்தங்களாக எல்லைப் பாதுகாப்பு, போர் திட்டம் மற்றும் துரித தாக்குதல்களில் தனது வீரத்தை வெளிப்படுத்திய வானின் காவலனான மிக்-21 விமானம் தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக ஓய்வுக்கு வந்துள்ளது.இதையும் பாருங்கள் : அறுபது ஆண்டுகள் சேவை! .. MIG-21 க்கு பிரியா விடை..!