யாருடைய அணு ஆயுத அச்சுறுத்தல்களை கண்டும், புதிய இந்தியா அஞ்சாது என, பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியாவில் கோடிக்கணக்கான தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் என்னை ஆசீர்வதித்து வருகின்றனர். தாரில் உள்ள நாட்டின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா தொழில்துறைக்கு புதிய ஆற்றலையும் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான மதிப்பையும் வழங்கும். புதிய இந்தியா அணு ஆயுத அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சாது. நேற்று பாகிஸ்தான் பயங்கரவாதி தனது துயரத்தை கண்ணீருடன் நினைவு கூர்ந்ததை தேசமும், உலகமும் பார்த்தது.பாகிஸ்தான் பயங்கரவாதிகள், நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் செந்தூரத்தை அகற்றினர். நாங்கள் ’ஆப்ரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தோம். நமது துணிச்சலான ஆயுத படைகள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள், பாகிஸ்தானை மண்டியிட செய்தது. பயங்கரவாதிகளை தங்கள் சொந்த மண்ணில் இந்தியா எதிர்த்து போராடும். பயங்கரவாதிகளை அவர்களின் சொந்த வீடுகளுக்குள் தாக்கும் புதிய இந்தியா இது. ஒவ்வொரு குடிமகனும் நாட்டிற்காக தங்களை அர்ப்பணிக்க வேண்டும்.1948ஆம் ஆண்டு இதே நாளில், நமது ராணுவம் ஹைதராபாத்தை விடுவித்து இந்தியாவின் பெருமையை மீட்டெடுத்தபோது, சர்தார் வல்லபாய் படேலின் உறுதியான மன உறுதி வெளிப்பட்டது. 140 கோடி இந்தியர்களுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அனைவரும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டனர். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.