காசாவில் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தியதற்காக, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். அப்போது வர்த்தக ஒப்பந்தம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்தார். இதற்கு இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளது. ஹமாஸ் அமைப்பும் இதனை ஏற்க சம்மதம் தெரிவித்தது. போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை எகிப்தில் நடந்து வருகிறது.இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கை: இஸ்ரேஸ், ஹமாஸ் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதனால் அனைத்து பிணைக் கைதிகளும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள். இஸ்ரேல், தனது வீரர்களை காசாவில் இருந்து திரும்பப் பெறும். அனைத்து தரப்பினரும் நியாயமாக நடத்தப்படுவார்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.இந்நிலையில், பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி இந்த ஒப்பந்தத்துக்காக நன்றி தெரிவித்தார்.