ஆண்டுக்கு, 50 ராக்கெட்டுகளை ஏவுவதற்கான இலக்கை, அடுத்த ஐந்து ஆண்டுகளில் அடைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் நடந்த தேசிய விண்வெளி தின கொண்டாட்டத்தில் காணொலி வாயிலாக பிரதமர் மோடி ஆற்றிய உரை:அனைவருக்கும் தேசிய விண்வெளி தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய விண்வெளி தினம், நமது இளைஞர்களிடையே உற்சாகத்தையை ஏற்படுத்தி உள்ளது. விண்வெளி துறையில் இளைஞர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்க, இஸ்ரோ சவால் நிறைந்த பல முயற்சிகளை எடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.நாட்டில் உள்ள விண்வெளி ’ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை, நான் கேட்க விரும்புகிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி துறையில் ஐந்து சிறப்பு வாய்ந்த ’ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களை உருவாக்க முடியுமா? அடுத்த 5 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 50 ராக்கெட்டுகளை விண்ணுக்கு ஏவக் கூடிய நிலையை நாம் அடைய வேண்டும் என்று, நான் விரும்புகிறேன்.ஒவ்வொரு வாரமும் ஒரு ராக்கெட்டை நாம் ஏவ வேண்டும். விண்வெளி தொழில்நுட்பமும் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது. செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தகவல் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. விண்வெளித் துறையில் தொடர்ந்து, புதிய மைல்கல்லை அடைவது இந்தியா மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் இயல்பாகிவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சந்திரனின் தென் துருவத்தை அடைந்து வரலாற்றைப் படைத்த முதல் நாடாக இந்தியா மாறியது.சர்வதேச விண்வெளி நிலையத்தில், மூவர்ணக் கொடியை ஏற்றி ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தினர். எனக்கு மூவர்ணக் கொடியை வழங்கியபோது ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் சொல்ல முடியாது. இந்தியாவின் விண்வெளி வீரர் குழுவையும் நாங்கள் தயார் செய்யப் போகிறோம்.இந்தியாவின் கனவுகளுக்கு சிறகுகளை வழங்க, இந்த விண்வெளி வீரர் குழுவில் சேருமாறு இளைஞர்களை அழைக்கிறேன். விரைவில், அனைத்து விஞ்ஞானிகளின் கடின உழைப்பால், இந்தியாவும் வரும் காலங்களில், சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும். கடந்த 11 ஆண்டுகளில், நாடு விண்வெளித் துறையில் பெரிய சீர்திருத்தங்களை கண்டுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.