கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பல லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அபகரிக்கும் நோக்கில் போலி ஆவணங்களை தயார் செய்த நபர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்.. திருக்கோவிலூர் மற்றும் ரிஷிவந்தியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலியாக ஆவணங்கள் தயார் செய்து பத்திரப்பதிவு நடைபெற்றதாக போலீசாருக்கு வந்த புகாரை தொடர்ந்து போலீசார் ஒரு பெண் உட்பட 2 பேரை கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து அந்த வழக்கில் தொடர்புடைய அருணாபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருக்கோவிலூர் போலீசார் கைது செய்தனர். மேலும், பத்திரப்பதிவிற்கு வாரிசு சான்றிதழ், இறப்புச் சான்றிதழ் மற்றும் ஆதார் உள்ளிட்டவைகளை போலியாக தயார் செய்து கொடுத்த சக்திவேல் என்பவரையும் திருக்கோவிலூர் போலீசார் இன்று கைது செய்து சிறையில் அடைத்தனர். போலிப் பத்திரங்களை பதிவு செய்த வழக்கறிஞர் மற்றும் பத்திரப்பதிவு அலுவலர் ஆகியோரை நாளை மற்றும் நாளை மறுநாள் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.