தமிழ்நாடு சட்டசபை தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே பாமக, பாஜக இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது. பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா ஆலோசனை நடத்தி உள்ளார். பாமக தலைவர் அன்புமணியை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்து பேசியுள்ளனர் பாஜகவின் முக்கிய தலைவர்கள். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சுமார் அரைமணி நேரம் நீண்ட சந்திப்பில் நடந்தது என்ன என்பதை பார்க்கலாம். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தொடங்கி மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. அதிலும், வலுவானதாக இருக்கும் திமுக கூட்டணியை வீழ்த்தியே தீருவோம் என்று அதிமுக - பாஜக கூட்டணி வியூகங்களை அமைத்து வருகிறது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று தமிழ்நாடு தழுவிய அளவில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பரப்புரை செய்து வருகிறார். இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். சுற்றுப்பயணம் தொடரும் அதே நேரத்தில் கூட்டணியை வலுப்படுத்தவும் வியூகம் வகுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை, அதிமுக, பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. மக்களவைத் தேர்தலின்போது உடைந்த இந்த கூட்டணி, 2026 சட்டமன்ற தேர்தலுக்காக மீண்டும் இணைந்துள்ளது. மக்களவைத் தேர்தலின்போது என்டிஏ கூட்டணியில் பயணித்த பாமக, இப்போதைய சூழலில் எந்த கூட்டணி என்று உறுதி செய்யவில்லை. பாமகவிற்குள் நிலவும் உட்கட்சி பிரச்னை காரணமாக, கூட்டணி முடிவை நானே எடுப்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி பரஸ்பரம் தெரிவித்து வருகின்றனர். இப்படியான சூழலில், சென்னையை அடுத்த அக்கரையில் அமைந்துள்ள அன்புமணி வீட்டில் வைத்து பாஜக மூத்த தலைவர்கள் சந்திப்பு நடத்தியுள்ளனர். பாஜகவின் தேசிய துணைத் தலைவரும், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளருமான பைஜயந்த் பாண்டா எம்.பி, முக்கிய பொறுப்பாளர்களுடன் சென்று அன்புமணியை சந்தித்துள்ளார். சுமார் அரை மணி நேரத்திற்கு நீண்ட இந்த சந்திப்பில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணியிலேயே இணைந்து பயணிக்குமாறு அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிகிறது. தமிழக அரசியலில், குறிப்பாக வடமாவட்டங்களில் வெற்றியை உறுதி செய்ய பாமகவின் இருப்பு அவசியம் என்று உணர்ந்த பாஜக, அக்கட்சியை கூட்டணிக்குள் கொண்டுவர முயல்வதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். முன்னதாக, கூட்டணிக் கட்சியின் தலைமையான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கடந்த வாரம் சந்தித்து பேசியிருந்தார் பைஜயந்த் பாண்டா. அடுத்தகட்டமாக அன்புமணியை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்துள்ளது. நிர்வாக ரீதியாக கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் அன்புமணி கொண்டுவரும் அதே நேரத்தில், நிறுவனர் என்கிற ரீதியில் கூட்டணி முடிவை தானே எடுப்பேன் என்று கூறி வருகிறார் ராமதாஸ். இதனால், ராமதாஸ் உடனும் பாஜக தலைமை பேச்சுவார்த்தை நடத்துமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.