கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பாஜக நிர்வாகி உமா ஆனந்தன் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை வரும் அக். 10ஆம் தேதி தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.கரூரில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் உத்தரவுபடி, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையிலான குழுவினரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், சிபிஐ விசாரணை கோரி, விஜய் கட்சியினர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது. இதே கோரிக்கையை வலியுறுத்தி பாஜக நிர்வாகி உமா ஆனந்தன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. வரும் அக்.10ஆம் தேதி, தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.