மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து அரசுப்பேருந்து ஒன்று மணல்மேடு மார்க்கமாக பந்தநல்லூர் புறப்பட்டுள்ளது. அப்பொழுது பேருந்தில் இடம் பிடிப்பதற்காக குழந்தையுடன் ஏறிய தந்தை குழந்தையை பேருந்து சீட்டில் அமர வைத்துவிட்டு, நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை அழைத்து வருவதற்காக பேருந்தில் இருந்து இறங்கியதாக கூறப்படுகிறது.அப்போது பேருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதால், பேருந்தை காணாமல் பதறிய பெற்றோர் ஆட்டோவை பிடித்துக்கொண்டு குழந்தையை தேடிச் சென்றுள்ளனர். பேருந்தில் இரண்டரை வயது பெண் குழந்தை தனியாக இருப்பதாக நடத்துநர் மாதவனிடம் சகபயணிகள் கூறியதால், பேருந்து நிலையத்தை விட்டு வெளியில் சென்ற பேருந்து மீண்டும் பேருந்து நிலையத்துக்குள்ளேயே வந்து அரைமணி நேரம் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவிகள் குழந்தையை அழவிடாமல் சாக்லேட் கொடுத்து பார்த்துக்கொண்டனர். இதனிடையே மீண்டும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பெற்றோர் விசாரித்த போது குழந்தை பேருந்து நிலையத்தில் பத்திரமாக இருப்பதை பார்த்துள்ளனர். இதையடுத்து, கண்ணீருடன் இருந்த அவர்களிடம் குழந்தை குறித்த அடையாளத்தை கேட்டு அறிந்த பின்னர் பெற்றோர்களிடம் போலீசார் குழந்தையை ஒப்படைத்துள்ளனர்.