அனைத்து துறைகளிலும் மகளிர் அடையும் முன்னேற்றம் தான், வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். முழுமையான முற்போக்கு சமூகமாக நாம் மாறுவதற்கும் அதுவே வழிவகுக்கும் என்றும், தெரிவித்துள்ளார். கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தரவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். உடனடியாக கண்டுபிடிக்கப்பட்ட குற்றவாளிகள் மீது ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளார். கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம், மனிதத்தன்மையற்றது என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.அவரது அறிக்கையில் கூறி இருப்பதாவது: கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத் தன்மையற்றது; இத்தகைய கொடூர குற்றச் செயல்களைக் கண்டிக்க எந்தக் கடுஞ்சொல்லும் போதாது.கடுமையான தண்டனை வழங்கினால் தான் சட்டத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்து, அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை விரைந்து பெற்றுத் தர, போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்.மேலும், நம் மகளிர் அனைத்துத் துறைகளிலும் அடையும் முன்னேற்றம் தான் இத்தகைய வக்கிர மிருகங்களின் ஆணாதிக்க மனநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.முழுமையான முற்போக்குச் சமூகமாக நாம் மாறுவதற்கு வழிவகுக்கும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதையும் பாருங்கள் - CM Stalin CBE Harassment | "எந்தக் கடுஞ்சொல்லும் போதாது" முதலமைச்சர் முக்கிய பதிவு