புதுச்சேரி சட்டப்பேரவையில், கடும் அமளி ஏற்பட்ட நிலையில், எதிர்க்கட்சியினர் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். புதுச்சேரி 15ஆவது சட்டப்பேரவையின் 6ஆவது பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 10ஆம் தேதி துவங்கி மார்ச் 27ஆம் தேதி முடிந்தது. 6 மாதத்திற்கு ஒரு முறை சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற விதியின் கீழ் இன்று காலை 10.38க்கு பேரவை கூடியது. அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் சிவா, குடிநீர் பிரச்னை குறித்து பேச நேரம் ஒதுக்கவும், கூடுதல் நாட்கள் சபையை நடத்தவும் கோரிக்கை விடுத்தார். முதல்வருடன் கலந்து பேசி சொல்வதாக சபாநாயகர் தெரிவித்தார். அப்போது, எதிர்க்கட்சியினர் சபாநாயகர் இருக்கை முன் சென்று கோஷமிட்டனர். உடனே, அவர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிடவே, சபைக் காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு வந்து, வெளியேற்றினர். பின்னர், சட்டசபை வளாகத்தில் அமர்ந்த காங்கிரஸ், திமுக உறுப்பினர்கள் கோஷமிட்டனர். அப்போது, 10.20க்கு தேதி குறிப்பிடாமல் அவை நடவடிக்கையை ஒத்திவைத்தார் சபாநாயகர் செல்வம். காலை 9.38க்கு துவங்கிய பேரவை கூட்டம் 10.20க்கு முடிந்தது. 42 நிமிடங்கள் மட்டுமே கூட்டம் நடந்தது.