கரீபியன் தீவு நாடான, ஜமைக்காவை ஆட்டுவிக்கும் ’Melissa’ புயல். பல்வேறு பகுதிகளிலும் கடும் சூறாவளி சுழன்றடிப்பதால், அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில், ஆந்திராவை புயல் மிரட்டிய அதே நேரத்தில், ஜமைக்காவை மிரள வைத்துள்ளது ’Melissa’ புயல். சுமார் 174 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மிகவும் சக்தி வாய்ந்த புயலாக உருவெடுத்துள்ளது. ஜமைக்காவின் கிங்ஸ்டன் கடற்கரையை கடக்கக்கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மணிக்கு 252 கிலோமீட்டர் என்ற அளவிற்கு அசுர வேகத்தில் சூறைக்காற்று வீசியதால், ஜமைக்கா பெரும் சேதத்தை சந்திக்கும் என அஞ்சப்படுகிறது. நூற்றாண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சக்தி வாய்ந்ததாக, இந்த புயல் இருப்பதால், உலகளவில் மிக அபாயகரமான “கேட்டகிரி 5” வகை புயலாக இது வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜமைக்காவை புரட்டி போடும் புயலின் கண் பகுதி மற்றும் அதன் சூறாவளி காற்றின் மையப்பகுதிக்குள் சென்று அமெரிக்க விமானப்படை விமானம் எடுத்த வீடியோக்களும் வெளியாகியுள்ளன. புயலின் உள்ளே இருக்கும் “ஸ்டேடியம் எஃபெக்ட்” எனப்படும் வட்ட வடிவ சுழலை, அமெரிக்க விமானப்படை விமானம் தெளிவாக படம் பிடித்துள்ளது. அதில், வெள்ளை நிற மேகங்கள் சுழன்று மேலே உயரும் காட்சி, பேரலைகள் ஆக்ரோஷமாக எழுவது போல் அமைந்துள்ளது. இதற்கிடையே, மெலிசா புயலால் ஜமைக்காவில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததுடன், மின்சாரம் இன்றி, மக்கள் தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், துறைமுகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது, மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். புயலால், அதி கனமழை பெய்து வருவதால் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு அபாயமும் அதிகரித்துள்ளது.இதையும் பாருங்கள்... சுழன்றடிக்கும் மெலிசா - புயலின் கண் வீடியோ | Hurricane Melissa Jamaica