நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது வரை நிர்வாகிகளை நியமிக்கவில்லை. மற்ற கட்சிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்களும் பணம் படைத்தவர்களும் கட்சியில் பதவிகளைப் பெற முயற்சி செய்து வருவதாகக் கூறும் விஜர் ரசிகர் மன்றத்தினர், பல ஆண்டுகளாக உழைத்தவர்களுக்குக் கட்சிப் பதவி கிடையாதா எனக் கேள்வி எழுப்புகின்றனர்.... தனது திரைப்பட டீசர்களைப் போல டீசர் வெளியிட்டுக் கட்சி ஆரம்பித்த விஜயின் ஒவ்வொரு நடவடிக்கையும் அரசியல் அரங்கில் அனைவராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருவதை யாராலும் மறுக்க முடியாது. மாநாடு நடத்தப்போவதாக அறிவித்ததில் தொடங்கி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து இல்லை, ஓணத்திற்கு வாழ்த்து, பெரியார் சிலைக்கு மரியாதை, மாநாட்டுக்கு அனுமதி பெறும் விவகாரம், மாநாட்டுப் பந்தல்கால் நடுதல் என தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஊடகங்களில் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று வருகின்றன.ஆனால், எந்தவித அரசியல் முன் அனுபவமும் இல்லாமல் கட்சி ஆரம்பித்துள்ள விஜயால் மாநாடு நடத்த முடியுமா? கட்சியைத் தொடர்ந்து நடத்த முடியுமா என்பது போன்ற பல்வேறு கேள்விகளும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன.தொண்டர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதிய விஜய், மாநாட்டின் வெற்றியின் மூலம் விமர்சனங்களுக்குப் பதிலளிப்போம் என்றார். கட்சி நிர்வாகிகள் யாரென்றே தெரியாமல் மாநாடு எப்படி நடக்கும் என்ற கேள்விகள் தற்போது முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மற்ற கட்சிகளில் புறக்கணிக்கப்பட்டோரும், பணம் படைத்தவர்களும் விஜய் கட்சியில் சேரப் படையெடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது விஜய் ரசிகர் மன்றத்தினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் இடம் கேட்டபோது, மாநாடு முடிந்த பிறகு மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று பதிலளித்தார். விஜயகாந்த் பாணியில் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட இருப்பதாகவும், மற்ற கட்சிகளில் இருந்து வருபவர்கள் உண்மையில் கட்சிக்கு உழைப்பார்களா அல்லது பதவிக்காக வருகிறார்களா என்பதைச் சரி பார்த்தே தலைமை முடிவெடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.சில கட்சிகளைப் போல சாதி அடிப்படையில் மாவட்டப் பொறுப்பாளர்களை நியமிக்காமல் உண்மையில் கட்சிக்காக உழைப்பவர்களுக்கே பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் கட்சிப் பொறுப்புகள் பெண்களுக்கும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். விஜயின் ஒவ்வொரு படத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்த அவரது ரசிகர்கள், அதே ஆவலுடன் கட்சிப் பொறுப்புகளையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா? படங்களின் வெற்றிக்காகக் களப்பணியாற்றிய ரசிகர்கள், கட்சித் தொண்டர்களாகவும் நிர்வாகிகளாகவும் மாறி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியையும் மக்கள் மன்றத்தில் ஹிட் ஆக்குவார்களா என்பதும் இனி வரும் நாட்களில் தெரியும்.