டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும், காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை என்று, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதுதொடர்பாக, இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு:தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, அவை எங்கே பிடிக்கப்பட்டதோ, அங்கேயே விட்டுவிடலாம். "ரேபிஸ்" பாதித்த, ஆக்ரோஷமான நாய்களை விடுவிக்கக் கூடாது.தெரு நாய்களுக்கு தெருக்களில் உணவளிக்கக் கூடாது. அதற்கு மாற்றாக, டெல்லி மாநகராட்சி குறிப்பிட்ட இடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும்.அதையும் மீறி, தெரு நாய்களுக்கு தெருக்களில் உணவளிப்பவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்பட வேண்டியிருக்கும்.தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடர்பாக, ஆங்காங்கே தகவல் பலகை வைத்து, அதில் உணவளித்தல் தொடர்பான தகவல்களை சரியாக குறிப்பிட வேண்டும்.ஒவ்வொரு வார்டிலும், அங்குள்ள தெரு நாய்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, உணவளிக்கும் பகுதியை மாநகராட்சி உருவாக்க வேண்டும்.இவ்வாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.தெரு நாய்கள் விவகாரம், வழக்கின் பின்னணி:நாடு முழுவதும், நாய்க்கடி மற்றும் ரேபிஸ் காரணமாக மனித உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், இது குறித்த செய்தி அறிக்கையை கவனத்தில் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வு, இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.இந்த வழக்கில் கடந்த 8ஆம் தேதி நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு;டெல்லி, டெல்லி மாநகராட்சி, என்எம்டிசி ஆகிய அனைத்து பகுதிகளில் இருந்தும், தெரு நாய்களை விரைவில் பிடிக்கத் தொடங்க வேண்டும். அதை எப்படிச் செய்வது என்பது பற்றி அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும். அவர்கள் இதற்காக ஒரு படையை உருவாக்க வேண்டுமானால், அதை விரைவில் செய்யுங்கள்.உடனடியாக அனைத்து பகுதிகளில் இருந்தும் தெரு நாய்களை கொண்டுவந்து காப்பகங்களில் அடைக்க வேண்டும். தற்போதைக்கு, மற்ற விதிகளை மறந்துவிடுங்கள்.டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக நாய் காப்பகங்களை கட்ட வேண்டும். இந்த காப்பகங்களில், நாய்களை கையாளக் கூடிய, கருத்தடை மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை வழங்கக் கூடிய நிபுணர்கள் இருக்க வேண்டும். எந்த காரணத்தை கொண்டும் இந்த நாய்களை வெளியே விடக்கூடாது. நாய்கள் இந்த காப்பகங்களில் இருந்து தப்பிக்க முடியாது என்பதை உறுதிப்படுத்த சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும்.நாய்க்கடி சம்பவங்கள் குறித்து புகாரளிக்க ஒரு ஹெல்ப்லைனை தொடங்கவேண்டும். டெல்லி தெருக்களை முற்றிலும் தெரு நாய்கள் இல்லாததாக மாற்ற வேண்டும். தெரு நாய்களைத் தத்தெடுக்கவும் அனுமதிக்க கூடாது. இவ்வாறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர்.ஆனால், இந்த உத்தரவுக்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. குறிப்பாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தரப்பில் இந்த தீர்ப்புக்கு எதிராக முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், தற்போது புதிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.இதன்படி... டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை. அவற்றைப் பிடித்து கருத்தடை சிகிச்சை செய்து, புழுக்கள் நீக்க மாத்திரை கொடுத்துவிட்டு அவை எங்கே பிடிக்கப்பட்டனவோ அங்கேயே விட்டுவிடலாம். அதேவேளையில், ரேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்கள், ஆக்ரோஷமான தன்மையோடு இருக்கும் நாய்களை காப்பகங்களில் பராமரிக்க வேண்டும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.