தென் கிழக்கு மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக் கடலில் 24ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்காக நகர்ந்து வலுவடைய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறி இருப்பதாவது: தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது நாளை அரபிக்கடலில் நிலவக்கூடும்.அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை வட மேற்கு திசையில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால், நாளை அக்டோபர் 24ஆம் தேதி, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது, நாளை வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும்.இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் நாளை முதல் 28ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.இவ்வாறு வானிலை மையம் கூறி உள்ளது.