கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் கட்டுமான பணிகள் நடந்துவரும் தேசிய நெடுஞ்சாலையின் பக்கவாட்டு சுவர், அடியோடு பெயர்ந்து விழுந்ததோடு, சர்வீஸ் சாலையும் அக்கக்காக பிளந்து விபத்து நேர்ந்த நிகழ்வு, வாகன ஓட்டிகளை அச்சத்தில் உறைய வைத்துள்ளது. பல பிஞ்சுக்குழந்தைகள் நூலிழையில் உயிர்தப்பியது எப்படி என்பதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.கொல்லம் மாவட்டத்திற்கு உட்பட்ட கடம்பட்டுக்கோணம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக இருபக்கமும் சர்வீஸ் சாலையில் தான் வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், கோட்டையம் - மைலக்காடு பகுதியில் வழக்கம் போல் வாகனங்கள் சென்று கொண்டிருந்த சமயம், சாலையின் நடுவே பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அருகில் ராட்சத தடுப்பு கற்களால் அமைக்கப்பட்டிருந்த சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்திருக்கிறது.சுவர் இடிந்த போது சர்வீஸ் சாலையும் அடியோடு பெயர்ந்து துண்டு துண்டாக பிளந்ததால், அவ்வழியே சென்ற பள்ளி வாகனம் ஒன்றும், கார் போன்ற இதர வாகனங்களும் இடையிடையே சிக்கிக் கொண்டன. செய்வதறியாது திகைத்துப் போன ஓட்டுநர்கள், பதறியடித்துக் கொண்டு கீழே இறங்கி, பள்ளிக்குழந்தைகளை இறங்கச்சொல்லி பத்திரமாக மீட்டிருக்கின்றனர். அடுத்த நொடி என்ன நடக்க போகிறது என்று அறியாமல், உயிரை கையில் பிடித்த படி அந்த திக் திக் நிமிடங்களை கடந்திருக்கின்றனர் வாகன ஓட்டிகள்.சாலை இருந்த சுவடே தெரியாத வகையில், அந்த பகுதி முழுவதும் சிதிலமடைந்த நிலையில், நிகழ்விடத்திற்கு வந்த காவல் மற்றும் பொதுப்பணித்துறையினர் வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். கொஞ்சம் விட்டிருந்தாலும் நூற்றுக்கணக்கான உயிர்களை இந்த விபத்து காவு வாங்கியிருக்கும் என விபத்தை நேரில் கண்டவர்கள் பதற்றத்துடன் கூறுகின்றனர். பெரும் விபத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை துவக்கியிருக்கின்றனர்.தேசிய நெடுஞ்சாலையின் கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதாலேயே இந்த விபத்து நேர்ந்திருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நெடுஞ்சாலைப்பகுதியின் சுற்றுச்சுவர் உறுதியற்று அமைத்ததாலேயே எளிதில் இடிந்து விழுந்திருக்கிறது என்றும் ஒரு தரப்பு புகார் கூறுகிறது. எனவே, மக்கள் உயிருடன் விளையாடி அலட்சியமாக செயல்பட்டவர்களை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்திருக்கிறது.