இரு சிறு நீரகங்களை இழந்த மகளுக்கு, பெற்ற தாயே உதவ மறுத்த நிலையில், மாமியார் தனது சிறுநீரகத்தை தானமாக கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அஷ்வினி பிரதாப் என்பவரது மனைவி பூஜா சிங்கிற்கு, அண்மையில் பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு பூஜாவின் உடல்நிலை மோசமானது. அவர் கான்பூர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு பூஜாவை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுநீரக தொற்றால் பூஜாவின் இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, பூஜாவுக்கு உடனடியாக டயாலிசிஸ் செய்யப்பட்டது. பின்னர், உயர் சிகிச்சைக்காக பூஜா, லக்னோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பூஜாவுக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தினர். இதனால், குடும்பத்தில் இருப்பவர்கள் யாரேனும் சிறுநீரக தானம் செய்வார்களா என மருத்துவர்கள் தரப்பில் கேட்கப்பட்டது. அப்போது, பூஜாவின் தாய், தனது சிறுநீரகத்தை தானம் செய்ய ஒப்புக் கொண்டார். ஆனால், கடைசி நேரத்தில் அவர், தனது முடிவை மாற்றி கொண்டு சிறுநீரகத்தை தர முடியாது என்று கூறியுள்ளார். அப்போது, பூஜாவின் மாமியாரான பீனம் தேவி, தனது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுக்க முன் வந்துள்ளார். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் பீனம் தேவியின் ஒரு சிறுநீரகம் பூஜாவுக்கு வைக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு பூஜாவும், அவரது மாமியாரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெற்ற தாயே உதவ முன் வராத போது, மாமியார் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.