சேலத்தில் ஒரு கிராமத்தையே ஏமாற்றி இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பெண் மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் கெங்கவல்லி நாகியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேமா. இவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் பிரேமா மீது ஒரு கிராமமே சேர்ந்து மோசடி புகார் அளித்துள்ளது. அரசு பள்ளியில் ஒப்பந்த துப்புரவு பணியாளராக இருக்கும் பிரேமா, தன்னை போல கிராமத்தில் உள்ள மற்ற பெண்களுக்கும் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். குறிப்பாக பள்ளியில் ஆசிரியர் பணி, சத்துணவு அமைப்பாளர், உதவியாளர் என அரசு வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு செலவாகும் என்றும் கூறியுள்ளார். பிரேமாவின் ஆசை வார்த்தைகளை நம்பி அவருக்கு பெண்கள் பணம் கொடுத்துள்ளனர். சுமார் நூறுக்கும் மேற்பட்ட பெண்களிடம் லட்சங்களில் பணத்தை வாங்கி சுருட்டிய பிரேமா, இரண்டு கோடி ரூபாய்கிட்ட வசூலித்துள்ளார். அரசு வேலை வாங்கி தருவதாக மட்டும் இல்லாம, கிராமத்தில் சீட்டு நடத்தி பணம் கொடுத்தால் இரட்டிப்பாக்கி தருவதாக கூறியும் தன் கைவரிசையை காட்டியுள்ளார். பிரேமாவை முழுவதுமாக நம்பிய பெண்கள் கடன் வாங்கியும், நகைகளை அடகு வைத்தும், லோன் எடுத்தும் பணத்தை கொடுத்துள்ளனர். ஒரு கட்டத்துக்கு மேல அரசு வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் இரட்டிப்பாகி தராமல் போக்கு காட்டிய பிரேமா மீது கோபமான பெண்கள் பணத்தை கேட்டுள்ளனர். அப்போது தான் பிரேமாவின் மோசடிகள் அம்பலமாகியுள்ளது. கொடுத்த பண்ம் பறிபோனதால் பதறிய பெண்கள் அலறியடித்து கொண்டு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.அங்கு பிரேமாவின் மோசடிகள் குறித்தும், பணத்தை இழந்தது குறித்தும் புகார் அளித்துள்ளனர். ஒப்பந்த துப்புரவு பணியாளர் மீது ரூ.2 கோடி வரை மோசடி செய்ததாகவும், பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுவதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அளித்த புகார் போலீசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. புகாரை பெற்ற போலீசார் உரிய விசாரணை நடத்துவதாக கூறி கண்ணீருடன் கதறிய பெண்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.