நாகை மாவட்டம் புஷ்பவனம் மீனவ கிராமத்தில், காதணி விழாவுக்கு ஊரில் உள்ள அனைவருக்கும் பத்திரிக்கை கொடுக்கவில்லை என்பதற்காக, மீனவர் குடும்பம் ஒன்று ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும், தொழில் மறியல் நீக்கப்படாததால் பாதிக்கப்பட்ட மீனவர், தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். ஊரை விட்டு ஒதுக்கி வைத்த மீனவர் குடும்பத்துடன் யாரும் உறவாடக் கூடாது என்று எச்சரித்து விடுக்கப்பட்ட தண்டோரா அறிவிப்புதான் இது.நாகை மாவட்டம் புஷ்பவனம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் கலைவாணன். மீனவரான இவர், தனது இரு பிள்ளைகளுக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் காதணி விழா நடத்தி இருக்கிறார். பத்திரிக்கை அடித்து காதணி விழாவை நடத்திய கலைவாணன் மீனவ கிராமத்தில் உள்ள உறவினர்கள் சிலருக்கு பத்திரிகை வைக்கவில்லை என கூறப்படுகிறது. இதற்காக, புஷ்பவனம் மீனவ கிராம பஞ்சாயத்து கூடி, கலைவாணனுக்கு தொழில் மறியல் விதித்ததுடன் ஊரை விட்டு விலக்கி வைத்திருக்கிறது.இதனால், பாதிக்கப்பட்ட கலைவாணன், வேறு வழியின்றி கிராம பஞ்சாயத்தாரிடம் முறையிட்டு தனக்கு எதிரான தொழில் மறியலை நீக்கக் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஊரில் இருந்து விலக்கி வைக்கப்பட்டதால், கடலுக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வந்த கலைவாணன், தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளை காப்பாற்றுவதற்காக, ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். இதையறிந்த கிராம பஞ்சாயத்துதாரர்கள், கலைவாணனின் ஆட்டோவில் ஊரார் யாரும் ஏறக் கூடாது என்றும், அவரது குடும்பத்துடன் ஒட்டும் வைக்க கூடாது; உறவும் வைக்க கூடாது என தடை விதித்திருக்கிறது. மேலும், பஞ்சாயத்து உத்தரவை மீறுவோருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தண்டோரா அடித்து அறிவித்துள்ளது புஷ்பவனம் மீனவ கிராம பஞ்சாயத்து.