கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.வீரேந்திராவை கைது செய்தது அமலாக்கத்துறை. எம்எல்ஏ-வின் வீட்டில் இருந்து 12 கோடி ரூபாய், 6 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெரிய அளவிலான சட்ட விரோத ஆன்-லைன் மற்றும் ஆஃப்-லைன் சூதாட்ட மோசடி தொடர்பாக நாடு முழுவதும் விரிவான சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ கே.சி.வீரேந்திராவை அமலாக்கத் துறை கைது செய்தது. பெங்களூரு மண்டல அலுவலகத்தால் நடத்தப்பட்ட இந்த சோதனை நடவடிக்கை, சித்ரதுர்கா, பெங்களூரு, ஹூப்ளி, ஜோத்பூர், மும்பை மற்றும் கோவா உள்ளிட்ட 31 இடங்களில் நடைபெற்றன. ஐந்து கேசினோக்களிலும் சோதனை நடத்தப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர், King567, Raja567 என்ற பெயரில் பல ஆன்-லைன் சூதாட்ட தளங்களை நடத்தி வருவதாக சோதனையில் தெரிய வந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவரின் சகோதரர் கே.சி.திப்பேஸ்வாமி, துபாயில் இருந்து டயமண்ட் சாஃப்டெக், டிஆர்எஸ் டெக்னாலஜிஸ், பிரைம்9 டெக்னாலஜிஸ் ஆகிய 3 வணிக நிறுவனங்களை இயக்குவதாகக் கூறப்படுகிறது. இவை கே.சி.வீரேந்திராவின் கால் சென்டர் சர்வீஸ் மற்றும் கேமிங் வணிகம் தொடர்பானவை.கட்டுக்கட்டாக ரூ.12 கோடி பறிமுதல்:அமலாக்கத்துறை சோதனையின் போது, கட்டுக்கட்டாக 12 கோடி ரூபாய் ரொக்கப் பணம், ஒரு கோடி மதிப்பிலான வெளிநாட்டு பணம், 6 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், சுமார் 10 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 17 வங்கிக் கணக்குகள் மற்றும் 2 வங்கி லாக்கர்களும் முடக்கப்பட்டன. கே.சி. வீரேந்திராவின் சகோதரர் கே.சி. நாகராஜ் மற்றும் அவரது மகன் பிரித்வி என்.ராஜ் ஆகியோரின் வீடுகளில் இருந்து பல சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. எம்எல்ஏவான கே.சி.வீரேந்திரா, கைது செய்யப்பட்டு, சிக்கிம் கங்க்டோக் நீதித்துறை நடுவரிடம் ஆஜர்படுத்தப்பட்டு, பெங்களூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆன்-லைன் சூதாட்ட வழக்கின் மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.